அமெரிக்காவில் முக்கிய நிர்வாக பதவிகளுக்கு இந்திய வம்சாவளியினர்: அதிபர் ஜோ பைடன் மீண்டும் பரிந்துரை!!
அமெரிக்காவின் முக்கிய நிர்வாக பதவிகளுக்கு 6க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரின் பெயர்களை அதிபர் ஜோபைடன் மீண்டும் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்கா நாடாளுமன்றத்தின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேலவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் தேர்தல் செயல்முறையும் கூட்டத்தில் தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமெரிக்க நிர்வாகத்தின் முக்கிய பணிகளுக்கு இந்திய அமெரிக்கர்களின் பெயர்களை அதிபர் ஜோ பைடன் மீண்டும் பரிந்துரை செய்தார்.
மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை செயலாளராக ரிச்சர்ட் வர்மா, உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு அமெரிக்க பிரதிநிதியாக ஹெல்ெலகேரே மூர்த்தி ஆகியோரின் பெயர்கள் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அஞ்சலி சதுர்வேதி முன்னாள் படை வீரர் விவகார துறையின் ஜெனரல் கவுன்சிலராகவும், விமான படையின் உதவி செயலாளராக ரவி சதுர்வேதி, உலகளாவிய பெண்கள் பிரச்னைகளுக்கான தூதராக கீதா ராவ் குப்ரா மற்றும் பாதுகாப்பு துறை துணை செயலாளராக ராதா ஐயங்கார் பிளம்ப் ஆகியோரை நியமிக்க வேண்டும் என்றும் அதிபர் மீண்டும் பரிந்துரைத்துள்ளார்.
இந்த முக்கிய நிர்வாக பதவிகளுக்கான பெயர்கள் அனைத்தும் கடந்த கூட்டத்திலும் அதிபரால் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் செனட் சபையால் இந்த பெயர்கள் சம்பந்தப்பட்ட பதவிகளுக்கு உறுதி செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் அதே அதிகாரிகளின் பெயரை அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி பெயரை அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். அதிபர் பைடனுக்கு மிகவும் நெருங்கிய நபரான எரிக் கார்செட்டி 2013ம் ஆண்டு முதல் லாஞ்ஏஞ்செல்ஸ் நகரின் மேயராக இருந்து வருகின்றார். கடந்த ஆண்டும் இவரது பெயர் பரிசீலனையில் இருந்தது. இந்நிலையில் தற்போதும் அவர் பெயரை அதிபர் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.