கொல்கத்தா விமான நிலைய ஓடுதளத்தில் விமானத்தின் வால் பகுதி உராய்ந்து விபத்து: 173 பயணிகள் உயிர்தப்பினர்!!
கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் வால் பகுதி உராய்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், 173 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 173 பயணிகளுடன் கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்தது. விமானத்தின் ஓடுதளத்தில் விமானம் தரையிறங்கிய போது, விமானத்தின் வால் பகுதி ஓடுதளத்தில் உரசியதால் விமானத்தின் குறிப்பிட்ட பகுதியில் உராய்வு ஏற்பட்ட சேதம் ஏற்பட்டது.
இந்த விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் கூட, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘விமானத்தின் வால் பகுதி ஓடுதளத்தில் உராய்ந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. விமான ஊழியர்கள் உட்பட அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக தரையிறங்கினர்.
கொல்கத்தா விமான நிலையில், இந்த விமானத்தின் பழுது சரிபார்க்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லி – பெங்களூரு சென்ற இண்டிகோ விமானம், ஓடுபாதையில் தரையிறங்கியது போது திடீரென இன்ஜின் தீப்பிடித்து எரிந்தது. அதையடுத்து அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.