அரசுப் பணிகளையும் தாண்டி மனித சேவையில் மகிழ்ச்சி அடைகிறேன்!..பிறந்த நாளில் மம்தா உணர்ச்சிபூர்வ பதிவு!!
எனது அரசுப் பணிகளுக்கு மத்தியில், மனித சேவையின் ஒருபகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று மம்தா பானர்ஜி உணர்ச்சிபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு இன்று பிறந்த நாள் என்பதால், அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர் இன்று ஹெலிகாப்டர் மூலம் கங்காசாகருக்கு வந்தார். புதியதாக ஹெலிபேட் பகுதியை திறந்துவைத்த அவர், கபில் முனியின் ஆசிரமத்தில் பூஜைகள் செய்தார்.
முன்னதாக நேற்றிரவு அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நான் கங்காசாகரை சென்றபோது, அங்கு எழுப்பப்படும் இனிமையான சங்கு நாதம் எனக்குள் உணர்ச்சி வசப்படுத்தியது. கங்காசாகர் மேளாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாரத் சேவாஷ்ரம் சங்கத்திற்குச் சென்றேன். இங்குள்ள மக்கள் சாதி, இனம், மதம் ஆகியவற்றை கடந்து தங்களது வாழ்நாள் முழுவதும் மக்களின் நலனுக்காக உழைக்கிறார்கள். எனது அரசுப் பணிகளுக்கு மத்தியில், மனித சேவையின் ஒருபகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க கங்காசாகர் மேளாவிற்கு தேசிய அந்தஸ்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.