வேலையின்மை அதிகரித்துள்ளதால் நாட்டுல பசங்களுக்கு பொண்ணு கிடைக்கல!..தேசியவாத காங். தலைவர் கவலை!!
நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதால் இளைஞர்களுக்கு பெண் கிடைக்கவில்லை; அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் உள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் கூறினார். கடந்த 2 நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா சென்ற பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, வரும் 2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ‘மகாராஷ்டிரா மிஷன் 45’ என்ற கோஷத்தை முன்வைத்து பிரசாரத்தை தொடங்கினார். இவரது கோஷம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில், ‘மகாராஷ்டிராவில் 48 மக்களவை இடங்கள் உள்ளன.
ஆனால் பாஜக மிஷன் 45 என்று கோஷங்களை எழுப்புகிறது. ஜேபி நட்டாவின் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில், பாஜக தோற்றதை அவருக்கு நினைவுபடுத்துகிறேன். நாட்டின் வேலையின்மை பிரச்னை அதிகரித்துள்ளதால், அது சமூகப் பிரச்னையாக உருவாக்குகிறது. வேலை கிடைக்காததால், பல இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். சமூகங்களுக்கிடையில் பாஜக பிளவை உருவாக்குகிறது.
நாட்டின் பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புகிறது. மகாராஷ்டிராவை தொழில் நிறுவனங்கள் வெளியேறுகின்றன; தற்போதுள்ள தொழிற்சாலைகளுக்கு எந்த ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், புதிய தொழிற்சாலைகளையும் உருவாக்கவில்லை’ என்று கூறினார்.