;
Athirady Tamil News

இதுதான் ஜனாதிபதி ரணில் ஆட்சியின் அற்புதம்!!

0

இன்று இலங்கையில் நடைபெறுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாகவே அமைந்துள்ளது. மக்களின் நலனுக்காக போராடிய வசந்த முதலிகே சிறையில் அடைக்கப்பட்டு தண்டணை அனுபவித்து வருகின்றார்.

அவர் செய்த குற்றம் என்ன? இந்த நாட்டையும் மக்களையும் நடு வீதிக்கு கொண்டு வந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி அவர்களை பதவியில் இருந்து வெளியேற்றினார். அவர் இன்று சிறையில் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

வசந்த முதலிகே தொடர்பாக ஊடகவியலாளர்கள் நுவரெலியாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கின்ற பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனால் பல பாரிய குற்றங்களை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டு அவர் நாட்டை விட்டு தப்பியோடிய விடயத்தை பெரும் செய்தியாக்கி இருக்கின்றார்கள். அப்படியானால் எங்களுடைய காவல்துறையும் புலனாய்வு பிரிவினரும் என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.

நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் உண்ண உணவின்றி தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். பாடசாலை சிறுவர்கள் உணவின்மையால் பாடசாலைக்கு வரமுடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு கொள்ளாத ஆட்சியாளர்களும் அரசாங்கமும் மீண்டும் அமைச்சர்களையும் ஆளுநர்களையும் நியமிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.

மின்சார பட்டியலை எவ்வாறு அதிகரிப்பது பொருட்களின் விலைகளை எவ்வாறு அதிகரிப்பது வரியை எவ்வாறு அதிகரிப்பது என மக்களுக்கு சுமையை அதிகரிக்கின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது.

ஆனால் இந்த மக்களின் துயரங்களை துடைப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்கான முயற்சியும் இல்லை. விசேடமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது. இதற்கான எந்தவிதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

தேவையற்ற வீண் விரயமான செலவுகளை செய்வதில் அரசாங்கம் முணைப்பாக இருக்கின்றது. ஜனவரி இரண்டாம் திகதி அனைத்து அரச வேலைத்தளங்களிலும் வருடத்தின் முதல் நாள் என கூறிக் கொண்டு அங்கு தேவையற்ற செலவுகள் செய்யப்பட்டுள்ளதுடன் நேரமும் வீணடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் இந்த நாட்டை சரியான பாதைக்கு கொண்டு வர முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்பொழுது எல்லா மாகாணங்களுக்கு சென்று ஓய்வெடுப்பதற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கொடுப்பதில்லை.

எனவே இன்னும் நாம் பாடங்களை சரியாக கற்கவில்லை என்றே தோன்றுகிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.