போராட்டங்களில் குதிப்போம்: கூட்டமைப்பு எச்சரிக்கை!!
சமஸ்டி கட்டமைப்பில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு சாத்தியம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என தெரிவிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, ஜனாதிபதி வழங்கிய காலக்கெடுவுக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கவில்லை என்றால், தமிழ் மக்களை அணி திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வுக் காணும் வகையில் டிசெம்பர் 13ஆம் திகதி சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது. இதன்போது பல முற்போக்கான கருத்துகள் வெளியிப்பட்டன. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு இதில் முக்கியப் பங்குள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி, எமது நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுகின்றன. இவற்றுக்கான தீர்வுகளே பிரதான விடயமாக உள்ளன எனவும் தெரிவித்தார்.
நல்லிணக்கத்தை அரசியல் தீர்வின் ஊடாக அடைய முடியுமா என்பதை பெப்பரவரி 04ஆம் திகதிக்கு முன்னர் தெரிந்துகொள்ள முடியும் என ஜனாதிபதி கூறியிருக்கிறார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதித் தீர்வு என்ன என்பதை நாம் அனைவரும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வே எமது கட்சியின் நிலைப்பாடு. அர்த்தமற்ற அதிகாரப் பகிர்வு எவருக்கும் தேவையில்லை. அர்த்தமற்ற அதிகாரப் பகிர்வு உண்மையில் அதிகாரப் பகிர்வாக இருக்காது. சமஸ்டி கட்டமைப்பில் மாத்திரமே அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு நாம் சொல்லிக்கொண்டிருக்கும் போதுதான் ஜனாதிபதி இதனை தீர்க்க முடியும் என தெரிவித்து காலக்கெடு ஒன்றையும் ஜனாதிபதியே அறிவித்துள்ளார். இந்த காலக்கெடுவுக்கு நாமும் இணங்கியிருக்கிறோம். தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் புதிதாக எதனையும் ஆரம்பிக்க வேண்டியதில்லை. 35 வருடங்களாக இது தொடர்பில் பேசப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, பல இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியதை மாத்திரமே செய்ய வேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கூறியுள்ள காலக்கெடுவுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டும். இதனை செய்யாது காலத்தைக் கடத்தும் செயற்பாடாக இது இருக்கக்கூடாது. நாமும் பல்வேறு சந்தேகங்களுடன் தான் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம். பல தடவைகள் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன ஆனால் எதுவும் நடக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வரவில்லை என்கிற பலிச்சொல் எமக்கு வரக்கூடாது என்பதாலேயே நாம் கலந்துரையாடலில் ஈடுபடுகிறோம்.
காலக்கெடுவுக்குள் இதனை செய்ய முடியாதென தெரிந்து ஜனாதிபதி எம்மை ஏமாற்றுவராக இருந்தால், நாட்டினதும் சர்வதேசத்தினதும் கண்களில் மண்ணைத் தூவும் செயற்பாடாக இது இருக்குமாக இருந்தால் அதனை உலகுக்கு அம்பலப்படுத்துவோம். இது மட்டுமல்ல நாட்டில் எங்களுடைய மக்களை அணி திரட்டி நியாயமான அரசியல் சுதந்திரத்துக்காக பல போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் சுமந்திரன் எச்சரித்தார்.