ஓரிரு நாட்களுக்குள் இறுதி தீர்மானம்!!
சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற விவகாரம் தொடர்பில் இறுதி தீர்மானம் ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடிய நிலையில் சுயாதீன எதிர்க்கட்சி எம்.பி.யான விமல் வீரவன்ச முன்வைத்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தமது தாய்மொழியில் பரீட்சைக்கு தோற்றும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற தீர்மானம் பிரச்சினைக்குரியதாக உள்ளது.
ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வாக்களித்து அந்த தீர்மானத்தை இரத்து செய்ய முடியும்,ஆனால் இதுவரை அந்த வர்த்தமானி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை,எனவே இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் என்னவென்ற கேட்டார்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற தீர்மானம் தொடர்பில் சட்ட ஆய்வு கவுன்சிலிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். இறுதி தீர்மானம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பதிலளித்தார்.