ஆணைக்குழுவின் அதிகாரம் பாயும் என்கிறார் ஜனக!!
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கினால் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை நிராகரிக்க ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
மின்சக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர் மற்றும் பொறியியலாளர் ஒருவரினால் தயாரிக்கப்பட்ட மின் கட்டண அதிகரிப்பு யோசனையே அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தவறான தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட யோசனையில் கணித முறை, மின்சாரத் தேவை மற்றும் வழங்கல் போன்றவற்றில் முரண்பாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
பொய்யான தகவல்களின் அடிப்படையில் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க வேண்டாம் என்று ஆணைக்குழு அமைச்சரவையை வலியுறுத்தியுள்ளது.
எனவே, கட்டண உயர்வு குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் ஆணைக்குழு தற்போதைக்கு எந்த கட்டண உயர்வையும் அங்கீகரிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.