தேர்தலை நடத்த தடையல்ல!!
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் குழப்பமோ, சந்தேகமோ ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கும் அரசாங்கம், உள்ளூராட்சிமன்ற தேர்தலைக் காலந்தாழ்த்தி தடைகளை ஏற்படுத்த மாட்டோம் எனவும் பாராளுமன்றத்துக்கு அறிவித்தது.
பிரதி சபாநயாகர் தலைமையில் நேற்று கூடிய இவ்வருடத்துக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்திலேயே உள்ளூராட்சிமன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்தால் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது உரையாற்றிய பிரதமர் தினேஸ் குணவர்தனவும், நீதி அமைச்சர் விஜயதாஸவுமே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்தவால் தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவரப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 52/6 இன்படி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தினேஸ் குணவர்தன சபைக்கு அறிவித்தார்.
இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, இந்த திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு எப்போது என வினவினார். இதற்கு நாளை (06) என பிரதமர் பதிலளித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பதற்கான திகதிகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் இப்போது சமர்ப்பித்து தேர்தலைக் காலந்தாழ்த்தப்பார்ப்பதாக முயற்சிப்பதாக பிரதான எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியதோடு, பிரதமர் தினேஸ் குணவர்தனவோடு கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டன.
இதற்குப் பதிலளித்த பிரேம்நாத் சி. தொலவத்த எம்.பி, தேர்தலை இலக்கு வைத்து நான் இத்திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டுவரவில்லை. எனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நான் இதனையே குறிப்பிட்டிருந்தேன். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இது தொடர்பில் பேசி வருகிறேன் எனவும் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் யாரும் குழப்பமடையத் தேவையில்லை. அரசியலமைப்பின்படி திருத்தச் சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது சட்டமாக அமல்ப்படுத்தப்படுவதற்கு குறைந்தது இரண்டரை மாதங்கள் செல்லும். தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.