;
Athirady Tamil News

மனைவி மேகனை விமர்சித்ததால் வாக்குவாதம் இளவரசர் வில்லியம் சட்டையை இழுத்து, அடித்து கீழே தள்ளினார்: சகோதரர் மீது ஹாரி பரபரப்பு புகார்!!

0

இங்கிலாந்து இளவரசரான வில்லியமுடன், தனது மனைவி மேகன் மார்க்லே தொடர்பான வாக்குவாதத்தின்போது தன்னை அவர் அடித்து கீழே தள்ளியதாக இளவரசர் ஹாரி தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லஸ், மறைந்த டயானாவுக்கு பிறந்த இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி. இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடிகையான மேகன் மார்கெலை காதலித்து வந்தார். 2018ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அரச குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறினார்கள்.

இந்நிலையில் இளவரசர் ஹாரி ஸ்பேர்(spare) என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் வருகின்ற 10ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில அதிர்ச்சி தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், ‘‘கடந்த 2019ம் ஆண்டு மேகன் மார்கெலை குறித்து லண்டன் வீட்டில் எனக்கும் சகோதரர் இளவரசர் வில்லியமுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது வில்லியம், மேகனை கடினமானவர், முரட்டுத்தனமானவர் மற்றும் கரடுமுரடானவர் என்று விமர்சித்தார். ஒரு கட்டத்தில் வில்லியம் எனது சட்டை காலரை பிடித்து இழுத்தார். எனது கழுத்தில் இருந்த சங்கிலியை பிய்த்து எறிந்தார். என்னை தரையில் தள்ளிவிட்டார். இதனால் நான் கீழே விழுந்தேன். இதில் எனது முதுகில் காயம் ஏற்பட்டது” என்று புத்தகத்தில் ஹாரி கூறியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மேலும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களால் அரசு குடும்பத்தினர் ஹாரி மீது கோபம் கொள்ளக்கூடும் என்று கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.