திவாலாகும் நிலையில் பாகிஸ்தான்: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அரசு துறைகள்; வௌிநாடுகளில் உள்ள சொத்துகள் விற்பனை; எரிபொருள் தட்டுப்பாடு!!
இலங்கையை தொடர்ந்து திவாலாகும் நிலைக்கு பாகிஸ்தான் சென்று விட்டது. அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு தத்தளித்து வருகிறது. இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சே குடும்பம் நாட்டை விட்டே ஓடும் அளவுக்கு மக்கள் போராட்டமாக வெடித்தது. அதிபர், பிரதமர் பதவியில் இருந்த அண்ணன், தம்பிகள் இப்போது பதவி விலகி ரணில் தலைமையில் ஆட்சி நடத்த வேண்டிய சூழல் அங்கு ஏற்பட்டது. இன்னும் கூட இலங்கை முழுவதுமாக தலைநிமிர முடியவில்லை. இலங்கை போல் பாகிஸ்தானும் தற்போது திவால் நிலைக்கு மாறிவருகிறது.
அதிகரித்து வரும் கடன், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு, உலகளாவிய பணவீக்கம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஆகியவற்றை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தானின் பொருளாதாரம் நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. நிதிநெருக்கடியை சமாளிக்க அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக சொத்தை விற்க வேண்டிய நிலை அந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மின்சார தட்டுப்பாடு, சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சந்தைகளை முன்கூட்டியே மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு மேல் இவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளும் மின்சார பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் பெய்த பெருவெள்ளமும் உள்நாட்டு உற்பத்தியை முற்றிலும் முடக்கி விட்டது.
கடந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரை பெய்த பேய் மழையால் பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 4 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து விட்டது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட பணம் இல்லாமல் தவிக்கிறது பாகிஸ்தான் அரசு. ஜூன் மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து எரிசக்தி உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வாங்கிய ரூ.2.50 லட்சம் கோடியை திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் தற்போது நிச்சயமற்ற நிலை உருவாகி உள்ளது.
* பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
* பாகிஸ்தான் மின்துறை, எரிசக்தி துறையின் கடன் தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
* அரசுமற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியவில்லை.
* சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் பெற்ற கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் தத்தளிக்கிறது.