தலைமை செயலர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு!!
தலைநகர் டெல்லியில் நடைபெறும் தலைமைச் செயலாளர்களின் தேசிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார்.
கடந்த ஜூன் மாதம் இமாச்சல பிரதேசத்தில் தலைமைச் செயலாளர்களின் முதலாவது தேசிய மாநாடு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களின் 3 நாள் தேசிய மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் 2-ம் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
முதலாவது தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தற்போதைய மாநாட்டில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டுமுயற்சியை ஊக்குவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
விரைவான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் மாநாட்டில் எடுத்துரைத்தனர். தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மனித திறனை மேம்படுத்துவது குறித்து பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொழில் வளர்ச்சியில் அதிநவீன தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க வேண்டும்.
பெண்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பெண்களின் சுகாதாரம், ஊட்டச்சத்து; திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி வரியை அமல் செய்த பிறகு ஏற்பட்ட அனுபவங்கள், இந்த வரிவிதிப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது குறித்து மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது.
சுயசார்பு இந்தியா திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உள்ளூர் பொருட்களின் உற்பத்தி, விற்பனையை ஊக்குவிக்க வேண்டும். ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் அந்த அமைப்பு தொடர்பான மாநாடுகளை வெற்றிகரமாக நடத்த வேண்டும். இதற்கு மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
ட்விட்டரில் பிரதமர் கருத்து: மாநாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன். முக்கியமான கொள்கை தொடர்பான விவகாரங்களில் கருத்துகளை பரி மாறிக் கொள்வதற்கும் இந்தியாவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான குழு முயற்சியை வலுப்படுத்துவதற்கும் இந்த மாநாடு அடித்தளம் அமைக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.