உக்ரைன் போர் முக்கியமான கட்டத்தில் உள்ளது: ஜோ பைடன்!!
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் போர் விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்சுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது இருநாடுகளும் இணைந்து உக்ரைனுக்கு பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்களை வழங்குவதாக இரு நாட்டு தலைவர்களும் அறிவித்தனர். ஜெர்மனி அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு பின் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது, உக்ரைனில் போர் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. ரஷிய ஆக்கிரமிப்பை எதிர்க்க உக்ரைனியர்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். ரஷியா மெதுவாக முயற்சி செய்யவில்லை. அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போலவே காட்டுமிராண்டித்தனமாகவே உள்ளன. அவர்கள் எதையும் விடவில்லை. ஜெர்மனி பிரதமருடன் உக்ரைன் போர் குறித்து நீண்டதொரு ஆலோசனை நடத்தினேன்.
போரில் அடுத்தக்கட்டமாக நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று பேசினோம். நாங்கள் உக்ரைனுக்கு ஆதரவை அதிகரிக்கப் போகிறோம். ரஷிய வான் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனைப் பாதுகாக்க நாங்கள் உதவப் போகிறோம்.
அதன்படி உக்ரைனுக்கு பிராட்லி காலாட்படை சண்டை வாகனங்களை வழங்குவதற்கான அறிவிப்பை நாங்கள் கூட்டாக வெளியிட்டோம். இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.