மனோ கணேசனுக்கு தமிழக அரசு அழைப்பு!!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், ஜனவரி 11, 12 ஆகிய தினங்களில் தமிழக அரசு சென்னையில் நடத்தும் அயலக தமிழர் தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
“தாய் தமிழ்நாட்டில் பிரமாண்ட கொண்டாட்டம். அயலக தமிழர் தினம். உலகெங்கும் உள்ள சாதனை தமிழர்களுடன் கலை நிகழ்சிகள், உலக தமிழ் சங்கங்களுடன் கலந்துரையாடல், நலத்திட்டங்கள், சிறப்பு அமர்வுகள். சிறப்பு விருந்தினர் உரைகள்” ஆகியவை இடம்பெறவுள்ளன.
தமிழக அரசின் சிறுபான்மையினர், அயலக தமிழர் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் விழா நடைபெறும் என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுபற்றி மனோ கணேசன் எம்பி கூறியுள்ளதாவது, “இந்த 2023ஆம் ஆண்டு, இலங்கையில் வாழும் இலங்கை இந்திய மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்த 200 வது வருடமாகும். இவ்வருடத்தில், நமது மக்களின் பிரதான அரசியல் இயக்கமான, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில், இவ்விழாவில் மிக்க மன மகிழ்வுடனும், உரிமையுடனும் நான் கலந்து கொள்ள உள்ளேன்.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள், உண்மையில் “தமிழக வம்சாவளி தமிழர்கள்” என்றும் கருதப்பட வேண்டும் என்ற சிந்தனையை தமிழக அரசின் கவனத்துக்கு நான் கொண்டு வருவேன்.
உலகெங்கும், தமிழர்களை உழைப்பிற்காக பிரிட்டிஷ் அரசு கொண்டு சென்றது. கொண்டு வந்தது. தன்னிச்சையாகவும், வர்த்தக வியாபார நோக்கங்களிலும் தமிழர்கள் குடிபெயர்ந்து வந்தார்கள்.
மலேசியா, சிங்கப்பூர், பீஜி, மொரிசியஸ், தென்னாபிரிக்கா, பர்மா ஆகிய நாடுகளுக்கும், தமிழகத்தின் தென் திசை மாவட்டங்களிலிருந்து இலங்கைக்கும் வந்த தமிழர்களில், தாயகம் திரும்பியோரை தவிர, ஏனையோர் அவ்வவ் நாடுகளின் குடிமக்களாக வாழ்கிறார்கள்.
மலேசியா, சிங்கப்பூர், பீஜி, மொரிசியஸ், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் சிறப்பாக வாழும் நமது இனத்தவரில், இலங்கையில் மாத்திரம் கணிசமானோர் அவல வாழ்வு வாழும் உண்மையை உரக்க கூறுவேன்.
நவீன அடிமைத்துவம் தொடர்பான ஐநா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபோகாடா, இலங்கையில் பெருந்தோட்டங்களில் தமிழர்கள், சிறுபான்மையினர் என்ற முறையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ள செய்தியை தமிழக முதல்வரது அரசின், மக்களின், உலகெங்கும் இருந்து வந்து விழாவில் கூடும் தமிழ் பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு வருவேன்.
ஏனைய நாடுகளை விட தாய் தமிழகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கின்ற இலங்கையில் வாழும் தமிழக வம்சாவளி மலையக தமிழர்களை நோக்கி தமிழக முதல்வரின் சமூக நீதி கரங்கள் நீள வேண்டும் என்பதையும் கோருவேன்.
நீண்டகாலமாக தமிழக கண்களிருந்து மறைக்கப்பட்டிருந்த, நமது மக்களை நோக்கி, தமிழக அரசினதும், மக்களினதும் பார்வையை திருப்பி விட இந்த விழாவை நான் நிச்சயமாக பயன்படுத்துவேன்.
அதை எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்கு தெரியும் என நான் நம்புகிறேன். அதேவேளை வடக்கு கிழக்கில் வாழும் ஈழத்தமிழ் உடன்பிறப்புகளின் அவலங்களையும் எடுத்து கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.