நடுவானில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு; சக பயணியின் உயிரை காப்பாற்றிய இந்திய மருத்துவர்!!
லண்டனில் இருந்து பெங்களூருக்கு சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் அவருக்கு முதலுதவி கொடுத்து இந்திய வம்சாவளி மருத்துவர் உயிரை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தில் லண்டன் இளவரசி எலிசபெத் மருத்துவமனையில் இந்திய வம்சாவளி சேர்ந்த கல்லீரல் நிபுணரான மருத்துவர் விஸ்வராஜ் வெமலா (48) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது தாயுடன் லண்டனில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த 43 வயதான சக பயணி ஒருவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
அதையடுத்து அவர் விமானத்தில் இருந்த முதலுதவி கருவிகளை கொண்டு சக பயணியின் உயிரை காப்பாற்றினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மருத்துவப் பயிற்சியின் போது இதுபோன்ற ஆபத்தான காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படும். ஆனால் 40,000 அடி உயரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது எனக்கு புதியதாக இருந்தது. திடீர் மாரடைப்பால் மூச்சு விட முடியாமல் தவித்த பயணிக்கு அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சையால், ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
எனது 7 ஆண்டுகால மருத்துவ ஆலோசகர் பணியில், எனது தாயின் முன்பாக சக நோயாளி ஒருவரின் உயிரை காப்பாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். விஸ்வராஜ் வெமலாவின் மருத்துவ உதவியை சக பயணிகள் வெகுவாக பாராட்டினர். பின்னர் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.