வீட்டு வாடகை படி விதிகளில் திருத்தம்.! அரசு, பொதுத்துறை ஊழியர்களுக்கு கிடுக்கி: ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!!
அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வீட்டு வாடகை படி விதிகளில் ஒன்றிய நிதியமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. அதனால் ஒரே குடியிருப்பை இருவர் பகிர்ந்து கொண்டால் வீட்டு வாடகை படி கிடைக்காது. வீட்டு வாடகை கொடுப்பனவு என்பது வாடகை வீட்டில் வசிக்கும் தனது ஊழியருக்கு ஊதியத்துடன் வழங்கும் குறிப்பட்ட தொகையாகும். இந்த தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அரசுத் துறையின் குறிப்பிட்ட துறையில் குடியிருப்பு போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றது. பொதுவாக வீட்டு வாடகை படி பெறும் அரசு ஊழியர்களை மூன்று விதமாக பிரித்துள்ளனர். அதாவது எக்ஸ், ஒய், இசர்ட் ஆகியவையாகும். ‘எக்ஸ்’ பிரிவு என்பது 50 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளைக் குறிக்கிறது.
இங்கு 24 சதவீதம் அதாவது 7வது ஊதியக் குழுவின் பரிந்துரை கீழ் வாடகை படி வழங்கப்படுகிறது. ‘ஒய்’ பிரிவு என்பது 5 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கானது. இதில் 16 சதவீதம் வாடகை படி வழங்கப்படுகிறது. ‘இசர்ட்’ பிரிவு என்பது 5 லட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை இருந்தால், அங்கு 8 சதவீதம் அளவிற்கு வீட்டு வாடகை படி வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒன்றிய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை (டிஓஇ), அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை படி (எச்.ஆர்.ஏ) விதிகளில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி, ‘அரசுப் பணியில் பணியாற்றும் ஊழியர்கள், வேறு எந்த அரசு ஊழியருடனும் அரசாங்க குடியிருப்புகளைப் பகிர்ந்து கொண்டால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி கிடைக்காது.
அரசு ஊழியர்கள் தங்களது பெற்றோர், மகன் அல்லது மகளின் அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது. இந்த புதிய விதிமுறைகளானது, ஒன்றிய, மாநில, தன்னாட்சி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ெபாருந்தும். அதேபோல், நகராட்சி, துறைமுக பொறுப்பு, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, எல்.ஐ.சி போன்றவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு ஒரு அரசு ஊழியரின் மனைவி அல்லது அவர்களது குழந்தைகள் அரசு ஊழியராக ஒரே வீட்டில் வசிக்கிறார் என்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி கிடைக்காது. அதாவது ஒரே குடும்பத்தில் இருவரும் அரசு ஊழியராக இருந்து, இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்றால் இருவருக்கும் வீட்டு வாடகை படி கிடைக்காது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.