பஞ்சாப் அமைச்சர் ஃபாஜா சிங் சராரி ராஜினாமா – பின்னணி என்ன?
பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சர் ஃபாஜா சிங் சராரி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக இருந்தவர் ஃபாஜா சிங் சராரி. இவர் தனது நெருங்கிய நண்பரான தர்செம் லால் கபூர் என்பவருடன் நடத்திய தொலைபேசி உரையாடல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதில், முறைகேடாக பணம் ஈட்டுவது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்.
காங்கிரஸ் வலியுறுத்தல்: தொலைபேசி உரையாடல் வெளியானதையடுத்து, ஃபாஜா சிங் சராரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியது. மேலும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா வலியுறுத்தினார். அதோடு, மேலும் 2 அமைச்சர்களின் ஊழல் குறித்த ஆதாரங்களை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அமைச்சரவை விரவாக்கம்: பஞ்சாபில் புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். மாலை 5 மணிக்குள் எளிய முறையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. தற்போதை அமைச்சரவையில் 13 பேர் அமைச்சர்களாக உள்ளனர். 4 அமைச்சரவை பதவிகள் காலியாக உள்ளன.
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை அடுத்து அமைச்சர்களுக்கான இலாக்காங்களில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, ஃபாஜா சிங் சராரியை ராஜினாமா செய்யுமாறு ஆம் ஆத்மி தலைமை அறிவுறுத்தியதாகவும் அதை அடுத்தே அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.