;
Athirady Tamil News

உத்தராகண்ட் | ஜோஷிமத்தில் இருந்து 600 குடும்பங்கள் வெளியேற்றம்: முதல்வர் நேரில் ஆய்வு!!

0

ஜோஷிமத் நகரப் பகுதியில் வீடுகள், கோயில்களில் ஏற்பட்டுவரும் விரிசல்களால் உருவாகியிருக்கும் பாதிப்புகளை பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்ய அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று (சனிக்கிழமை) ஜோஷிமத் செல்கிறார். அதேபோல், அங்குள்ள ஆபத்தான பகுதிகளில் இருந்து 600 குடும்பங்களை வெளியேற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தராகண்டின் ஆன்மிக நகரமான ஜோஷிமத்தில் தொடர்ந்து நிலம் சரிந்ததன் காரணமக அங்குள்ள சுமார் 570 வீடுகள், கோயில்கள், சாலைகளில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள 3000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாறுபாடு, நகரமயம் காரணமாக நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை உத்தராகண்ட் தொடர்ந்து சந்தித்து வருகிறது. தற்போது, ஆன்மிக நகரமான ஜோஷிமத் பகுதியில் வீடுகள் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டு அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அங்குள்ள ஒரு கோயில் இடிந்து விழுந்தது. பல வீடுகளில் விரிசல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் அதிகரித்து வரும் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று ஜோஷிமத் செல்கிறார். அங்குள்ள ஆபத்தான பகுதியில் இருக்கும் 600 குடும்பங்களை வெளியேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து புஷ்கர் சிங் தாமி கூறுகையில், “உயிர்களை காப்பாற்றுவதே எங்களின் முதன்மையான நோக்கம். ஜோஷிமதில் மிகவும் ஆபத்தான பகுதியில் வசித்துவரும் 600 குடும்பங்களை உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவாகரம் குறித்து அவசரமாக, நீண்ட கால மற்றும் உடனடி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மக்களை வெளியேற்ற ஹெலிகாப்டர்கள், மருத்துவசதிகள் தயார் நிலையில் இருக்கும் படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள நகரில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அங்கு மாநில மற்றும் தேசிய பேரிடர் மோலாண்மை பணியாளர்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்ற ஹெலிகாப்டர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதற்கிடையில், நிலச்சரிவு குறித்து விரிவாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த ஆய்வுக்குழு குடியிருப்புகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்புகள், நதிநீர் பகுதிகளில் ஏற்பட்டுவரும் விரிசல்களின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றம், தொடர்ந்து நடைபெற்றுவரும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் காரணமாக இந்த பாதிப்புகள் உருவாகியிருப்பதாக உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். மனித செயல்பாடுகள், இயற்கை மாற்றாம் ஆகியவைகளின் பல்வேறு காரணிகளால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் இயக்குனர் கலாசந்த் சைன் கூறுகையில், “பாதுப்புகளுக்கான காரணங்கள் சமீபத்தில் ஏற்பட்டவை இல்லை. இது நீண்டகாலமாக இருந்துவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

இமயமலையில் மேற்கொள்ளப்படும் புனித பத்ரிநாத் யாத்திரை, மலையேற்றம், பூக்களின் பள்ளத்தாக்கு போன்ற பல இடங்களுக்கு ஏறிச் செல்வதற்கான நுழைவு வாயிலாக இந்த நகரம் கருதப்படுகிறது. இங்குள்ள ஜோதிர்மத் இந்து மதத்தின் தாயகமாக கருதப்படும் முக்கியமான மத நிறுவனங்களில் ஒன்றாகும். அதேபோல், சீன எல்லைக்கு அருகில் இருக்கும் ராணுவ மையத்தின் கண்டோமெண்ட் ஒன்று இங்கு உள்ளது.

இந்த விரிசல் பாதிப்பு காரணமாக, ஆசியாவின் மிகப்பெரிய ரோப் வே-ஆன ஆவுலி ரோப் வே சேவை நிறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய அனல் மின் நிறுவனத்தின் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.