;
Athirady Tamil News

மண்ணுக்குள் புதையும் அழகிய கிராமம்- 600 குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றம்!!

0

இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் உத்தரகாண்ட். இங்கு இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்கள் பல உள்ளன. இதில் ரிஷிகேஷ்-பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற கிராமம். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். மலையடிவாரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

தவுலிகங்கா மற்றும் அலக்நந்தா நதிகள் விஷ்ணுபிரயாக்கில் இருந்து ஒன்று சேர்ந்து ஜோஷிமத் கிராமம் வழியாகத்தான் செல்கிறது. இதனால் கிராமம் முழுவதும் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும்.இந்த அழகை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இங்கு தங்கி செல்வது வழக்கம். ரிஷிகேஷ் மற்றும் பத்திரிநாத்துக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களும் இந்த கிராமத்தை தாண்டிதான் செல்லவேண்டும்.

மேலும் பனிமூடிய சிகரங்களில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் ராணுவ வாகனங்களும் இக்கிராமத்தை தாண்டியே செல்ல வேண்டும். இப்படி பல சிறப்புகளை கொண்ட ஜோஷ்மத் கிராமத்தில் ஆபத்துக்கும் பஞ்சமில்லை. இந்த கிராமம் நிலச்சரிவு மற்றும் நிலநடுக்க அபாயம் கொண்ட பகுதியில் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறி இருந்தனர். ஆபத்தான பகுதி என்பதால் இங்கு கட்டுமானம் உள்ளிட்ட பணிகளில் கவனம் தேவை எனவும் எச்சரித்து இருந்தனர்.

என்றாலும் சுற்றுலா பயணிகள் வரத்து மற்றும் அவர்கள் கிராமத்தில் தங்கவும் தொடங்கியதால் ஜோஷ்மத் கிராமத்தில் கட்டுமானங்கள் அதிகரித்தன. இதனால் கிராமத்தின் ஆபத்து அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இக்கிராமத்தின் பல பகுதிகளில் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. இதுபற்றி கிராமத்தின் மூதாதையர் எச்சரிக்க தொடங்கினர்.

அதிகாரிகளும் ஆபத்தான பகுதிகளில் இருந்த மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். அதிகாரிகளின் எச்சரிக்கையை தொடர்ந்து ஆபத்தான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற தொடங்கினர். இந்தநிலையில்தான் இங்குள்ள பல வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. சிங்தார் பகுதியில் உள்ள ஒரு கோவிலும் இடிந்தது. அப்போது கோவிலில் யாரும் இல்லாததால் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை.

இதுபோல அந்த பகுதியில் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழ தொடங்கின. ஜோஷிமத் கிராமத்தில் அடுத்தடுத்து வீடுகள் இடிந்ததும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டதும் மக்களிடையே பீதி கிளம்பியது. மேலும் இக்கிராமம் அடியோடு மண்ணில் புதைந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டது. இதையடுத்து முதல்மந்திரி புஷ்கர்சிங் தாமி வீடியோ கான்பரன் சிங் மூலம் அப்பகுதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் அங்கு எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார். இதையடுத்து ஜோஷிமத் கிராமத்தில் இருப்போரை உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்ல அவர் உத்தரவிட்டார். அதன்படி அங்கு தங்கிஇருந்த 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோல ஜோஷிமத் கிராமத்துக்கு மீட்பு படையினரும் அனுப்பபட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆபத்தான பகுதிகள், பள்ளத்தாக்குகளில் இருப்போரை மீட்டு வர ஹெலிகாப்டர்களும் அனுப்ப பட்டுள்ளன.

ஜோஷிமத் நகரில் எடுக்கப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி கூறியதாவது:- ஜோஷிமத் கிராமத்தில் குடியிருக்கும் மக்களை காப்பாற்றுவதே எங்களின் முதல் கடமை. அதைதான் இப்போது நாங்கள் தொடங்கி உள்ளோம்.

பொதுமக்கள் அனைவரையும் மீட்ட பின்னர் அங்கு மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம் என்றார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து அகற்றப்பட்ட மக்களை அங்கு மீண்டும் குடியமர்த்த தேவையான நடவடிக்கைள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.