குடிக்க பணம் இல்லாததால் மகளை விற்க முயன்ற தந்தை- பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு!!
தெலுங்கானா மாநிலம், ஆலம்பூர் மண்டலம், பஞ்சேர்லா பகுதியை சேர்ந்தவர் ஜானகிராம். கூலி தொழிலாளியான இவருக்கு ஒரு மனைவியும், 2 வயதில் மகளும் உள்ளனர். ஜானகிராம் மதுபோதைக்கு அடிமையானார். இதனால் இவரது மனைவி ஜானகிராமை விட்டு பிரிந்து சென்றார்.
ஆனால் மகளை ஜானகிராம் தன்னுடன் வைத்துக்கொண்டு ரெயில்களில் பிச்சை எடுக்க வைத்து அதன் மூலம் வரும் வருமானத்தில் மது குடித்து வந்தார். இந்த நிலையில் ஜானகிராம் தனது மகளுடன் நந்தியாலா மாவட்டம், டான் நகரப் பகுதிக்கு ரெயிலில் வந்து இறங்கினார். அங்குள்ள அம்மா ஓட்டல் சர்க்கிள் பகுதியில் மகளை பிச்சை எடுக்க வைத்தார்.
அங்கு ஜானகிராம் குடிப்பதற்கு போதுமான அளவு வருவாய் கிடைக்கவில்லை. இதனால் தனது மகளை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்ய முடிவு செய்தார். அங்குள்ளவர்களிடம் தனது மகளை ஒரு லட்சத்துக்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்து வந்தார். ஆனால் அங்கு யாரும் சிறுமியை வாங்க முன்வரவில்லை. அங்கு வந்த நபர் ஒருவர் அவரது மகளை வாங்கிக் கொள்ள முன் வந்தார்.
ஜானகிராம் தனது மகளை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்துவதை கண்ட அப்பகுதி மக்கள் ஜானகிராமை பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவர்கள் சிறுமியை மீட்டு செல்ல முயன்றனர்.
ஆனால் ஜானகிராம் தனது மகளை அனுப்ப மறுத்து பிடிவாதம் செய்தார். இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் ஜானகிராமுக்கு கவுன்சிலிங் கொடுத்து மகளை நல்லபடியாக வைத்துக்கொண்டு படிக்க வைக்க வேண்டும் என ஆலோசனைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்.