ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ராணுவ வீரரை கொன்ற 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!
ஈரானில் பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் அணியாமல் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற இளம் பெண் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து நாடு முழுவதும் அங்கு போராட்டம் வெடித்தது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர். இது அந்நாட்டு இஸ்லாமிய குடியரசிற்கு மிகப்பெரிய சவாலாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின்போது, துணை ராணுவப் படை வீரர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்த போராட்டத்தின்போது துணை ராணுவ வீரர் ருஹோல்லா அஜாமியன் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முகமது மஹ்தி கராமி மற்றும் செய்யத் முகமது ஹொசைனி ஆகியோர் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறை செய்தி ஏஜென்சி உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் டிசம்பர் மாதம் குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. கடந்த செவ்வாயன்று உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.