ஆளுநர் உரையில் திமுகவினர் என்ன குறை கண்டார்கள்? – அண்ணாமலை கேள்வி!!
தமிழ்நாடு என்பதற்கு பதிலாக `தமிழகம்’ என்று சொல்லும் திமுகவினர் ஆளுநர் உரையில் என்ன குறையைக் கண்டார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பிஉள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திராவிட நாடு கோரிக்கை நீர்த்து போகவில்லை என்றும், சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துகளை எடுத்துரைக்கும் திமுகவினருக்கு ஆளுநரை விமர்சிக்க தகுதி இல்லை. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக `தமிழகம்’ என்று சொல்லும் திமுகவினர் ஆளுநரின் உரையில் என்ன குறை கண்டார்கள்.
சங்க கால இலக்கியங்களில் தமிழகம், தமிழ்நாடு என்ற இரு சொற்களும் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது ஆளுநரின் கருத்து. அதை திமுகவினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை. இன்றளவும் தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து முழங்கும் பிரிவினைவாத விஷச் செடிகளை வளர்த்து விட்டதில் திமுகவின் பங்கினை அனைவரும் அறிவர்.
வழக்கம்போல கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஆட்சியில் உள்ள குளறுபடிகளை மறைப்பதற்காக திசை திருப்பும் முயற்சியாகவே திமுகவினரின் செயல்பாடு இருக்கிறது. இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.