பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் ஆவின் நெய்க்கு கடும் தட்டுப்பாடு: சரிசெய்ய பால் முகவர்கள் கோரிக்கை!!
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், ஆவின் நெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாகப் பால் மட்டுமின்றி 225-க்கும் மேற்பட்ட பால் பொருள்கள் தயாரித்து விற்கப்படுகின்றன. ஆவின் நெய்க்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது, ஆவின் பால் கொள்முதல் குறைந்து வருவதால், நெய், வெண்ணெய் தயாரிக்க முடியாமல் ஆவின் நிர்வாகம் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கடைகளில் ஒரு கிலோ, 100 கிராம் நெய் மட்டும் கிடைக்கிறது. 200 கிராம், 500 கிராம் ஆவின் நெய் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையில், ஆவின் நெய் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆவின் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது சரியானதல்ல. ஆவின் பால் கொள்முதல் குறைந்துவருவதால், வெண்ணெய் மற்றும்நெய் தயாரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பால் முகவர்கள் சங்கத்தினர் கூறியதாவது: ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் கடுமையாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, வெண்ணெய்க்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, நெய் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை, கோயம்புத்தூர், வேலூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆவின் நெய்க்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.