;
Athirady Tamil News

ரொனால்டோவுக்காக சௌதி அரேபியாவின் திருமணம் குறித்த கடுமையான சட்டம் வளைக்கப்படுகிறதா?

0

சௌதி அரேபிய சட்டப்படி திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது சட்டவிரோதம் என்றாலும், அங்கு ரொனால்டோ தனது காதலியோடு லிவ்-இன் உறவில் இருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கிளப்புக்கான தனது முதல் போட்டியில் விளையாடுவதற்கு இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது.

இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம், ரொனால்டோ இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது. அவர் சௌதிக்கான தனது முதல் போட்டியை சௌதி ப்ரோ லீக் கிளப்பான அல்-தாய்க்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவிருந்தார்.

ஆனால், அவர் விளையாடவில்லை. சுமார் 1700 கோடி ரூபாய் சம்பளத்தோடு, 2025ஆம் ஆண்டு வரை சௌதியுடன் ரொனால்டோ ஒப்பந்தம் செய்துள்ளார். அவ்வளவு சம்பளத்திற்கு ஒப்பந்தமாகியும் அவர் ஏன் விளையாடவில்லை?

ரொனால்டோ முன்பு மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் விளையாடி வந்தார்.

கடந்த திங்கட்கிழமையன்று, சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத் சென்றடைந்த அவருக்கு அங்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள், அல்-நாசர் கிளப்பின் மைதானத்திலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரொனால்டோ தனது புதிய கிளப்பை சேர்ந்த வீரர்களுடன் பயிற்சியில் பங்கேற்றார். அவர் ஜனவரி 6ஆம் தேதி முதல் போட்டியில் விளையாடுவார் என்று அல்-நாசர் முழு நம்பிக்கையுடன் இருந்தது. இந்தப் போட்டிக்காக சுமார் 28,000 டிக்கெட்டுகள் வரை விற்பனையானது.

ஆனால், நவம்பர் மாதம் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் அவர் இரண்டு போட்டிகளில் விளையாடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டதாக அதற்குப் பிறகு தான் அல்-நாசர் கிளப்புக்கு தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒரு போட்டியில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரொனால்டோ அவருடைய ரசிகர்களில் ஒருவருடைய கைபேசியைத் தட்டிவிட்டது அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.
தடை விதிக்கப்பட்டது ஏன்?

ரொனால்டோ கைபேசியைத் தட்டிவிட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர். ஆட்டிசம் குறைபாடு இருக்கும் ஒருவருடைய கைபேசியைத் தட்டிவிட்டதற்கு ரொனால்டோ மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால், அந்த ரசிகர் மன்னிப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

மான்செஸ்டர் யுனைடெட் அணி, அந்தப் போட்டியில் 0-1 என்ற கனக்கில் தோல்வியடைந்தது. போட்டி முடிந்த பிறகு ரொனால்டோ, கால்பந்து வீரர்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு சிறுவனின் கையிலிருந்த கைபேசியை, சிறுவனின் கைகளைக் கடுமையாகத் தட்டியதன் மூலம் கீழே விழ வைத்தார்.

இந்தச் சம்பவத்திற்காக ரொனால்டோவை போலீசாரும் எச்சரித்தனர். அதற்குப் பிறகு அவர் சமூக ஊடகத்தில் மன்னிப்பும் கேட்டார். ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியைக் காண்பதற்கு அந்த ரசிகருக்கு அழைப்பும் விடுத்தார்.

இந்தச் சம்பவம் குறித்து அவர் பேசியபோது, “இக்கட்டான சூழ்நிலையில் நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. ஆனால், இதையெல்லாம் மீறி இந்த அழகான விளையாட்டை விரும்பும் இளைஞர்களுக்காக மரியாதயான வழியைக் கடைபிடித்து நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும்,” என்று கூறினார்.

ஆட்டிசம் குறைபாடுடைய 14 வயதான ஜாக், ரொனால்டோவின் வாய்ப்பை நிராகரித்தார். அவர் தெரிவித்த மன்னிப்பைக்கூட ஏற்கவில்லை.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் காரணமாக அவரைத் தடை செய்ய முடியவில்லை. அதனால்தான் இப்போது அவர் தனது புதிய கிளப்பில் அந்தத் தடையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஃபிஃபா விதிகளின்படி, ஒரு வீரருக்கு நான்கு போட்டிகள் அல்லது மூன்று மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்து, அவரது இடமாற்றம் நிகழும் வரை அதைச் செயல்படுத்த முடியாமல் இருந்தால், அந்த வீரர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு புதிய கிளப்பில் சேர்ந்த பிறகு அதைச் செயல்படுத்துவது கட்டாயம்.

ரொனால்டோவுக்கும், அவர் அதே கிளப்பில் நீடித்தாலும், வேறு கிளப்புக்கு மாறினாலும், அவர் மீதான தடை அமல்படுத்தப்படும் என்று அப்போதே தெரிவிக்கப்பட்டது.

அல்-நாசர் கிளப்பின் அடுத்த போட்டி ஜனவரி 14, 21 ஆகிய தேதிகளில் நடக்கும். ஆனால், ரொனால்டோ தனது புதிய கிளப்புக்கான முதல் போட்டியை ஜனவரி 21 அன்று தான் விளையாட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினத்தில், அல்-நாசர் இட்ஃபாக் கிளப்புக்கு எதிராக விளையாடுகிறது.
ரொனால்டோவுக்காக சட்டத்தை வளைக்கிறதா சௌதி அரேபியா?

கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவருடைய காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவி-இன் உறவில் வாழ்ந்து வருகின்றனர். சௌதி அரேபிய சட்டப்படி இது தவறு. அந்நாட்டுச் சட்டப்படி, ஒரே வீட்டில் திருமனம் செய்துகொள்ளாமல் வாழ்வது சட்டவிரோதமானது.

இருப்பினும், ரொனால்டோவும் அவருடைய காதலியும் இதற்காக அதிகாரிகளால் தண்டிக்கப்படப் போவதில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பானிய செய்தி நிறுவனமான இஎஃப்இ, ரொனால்டோ உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் வெளிநாட்டவராகவும் இருப்பதால் அவர் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளது.

ரொனால்டோவுக்கும் ரோட்ரிகஸுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் ரொனால்டோவுக்கு இரட்டையர்கள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இரண்டு சௌதி வழக்கறிஞர்களை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி தெரிவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. அதன்படி, ரொனால்டோவின் இந்தச் சூழ்நிலைக்குள் அதிகாரிகள் ஈடுபட மாட்டார்கள் என்று சட்ட வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு வழக்கறிஞர், “திருமண ஒப்பந்தம் இல்லாமல் இணைந்து வாழ்வதை சட்டம் தடை செய்தாலும், அதிகாரிகள் யாரையும் துன்புறுத்தாமல் இருக்கத் தொடங்கியுள்ளனர். இந்த சட்டங்கள், நிச்சயமாக பிரச்னையோ குற்றமோ நிகழும்போது பயன்படுத்தப்படுகின்றன,” எனத் தெரிவித்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.

மற்றொரு வழக்கறிஞர், “சௌதி அரேபிய அதிகாரிகள், வெளிநாட்டவர்கள் விஷயத்தில் இதுபோன்றவற்றில் தலையிடுவதில்லை. ஆனால், சட்டம் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வதைத் தடை செய்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.