ஹிட்லர், நாஜி வரலாறு: மனைவிக்காக ‘ஊக்க மருந்து’ எடுத்துக் கொண்டாரா ஹிட்லர்?
சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலுக்கு உத்தரவிட்டபோது ஜெர்மனியின் அடாஃப் ஹிட்லர் கொகைன் போதைமருந்துக்கு அடிமையாகி இருந்ததாகவும், அது தவிர 80 விதமான போதைமருந்துகளை பயன்படுத்தி வந்ததாகவும் வரலாற்று ஆசிரியர் கில்ஸ் மில்டன் தனது “When Hitler Took Cocaine” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காலை உணவுக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே அடால்ஃப் ஹிட்லர் போதை ஊசிகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கி விடுவார் என்கிறார் கில்ஸ் மில்டன். இதற்காக ஒரு கிண்ணம் ஓட்ஸ் சாப்பிட்டதும் தனது தனி மருத்துவரான தியோடர் கில்பர்ட் மோரெலை வரவழைப்பாராம்.
அசாதாரண காக்டெய்ல் மருந்துகளை உட்செலுத்துவதற்காக மருத்துவர் மோரெல் ஹில்டரின் சட்டையின் கைப்பகுதியைச் சுருட்டுவார். அந்த மருந்துகளில் பல இப்போது போதைப் பொருள் என்றும் சட்ட விரோதமானவை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று தனது புத்தகத்தில் மில்டன் குறிப்பிடுகிறார்.
அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் மேலும் சில வியப்புக்குரிய தகவல்களைப் தொடர்ந்து பார்க்கலாம்.
ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் ஆம்பெட்டமைன்கள், பார்பிட்யூரேட்டுகள், ஓபியேட்டுகள் உள்ளிட்ட மருந்துகளை ஹிட்லரின் உடலில் செலுத்தினார் மோரெல். இதனால் அவர் ஊசி மருந்துகளின் மாஸ்டர் என்று அறியப்பட்டார். ஹிட்லரின் நெருங்கிய வட்டாரத்தில் சிலர் அவர் ஹிட்லரைக் கொல்ல முயற்சிக்கிறாரோ என்றுகூடக் கருதினார்கள்.
ஆனால் மருத்தவர் தியோடர் மோரெல் ஹிட்லரைக் கொல்ல ஏதும் செய்யவில்லை. உடல் துர்நாற்றம் கொண்ட பருமனான மோரெல் ஒரு விருந்தில் ஹிட்லரை முதன் முதலாகச் சந்தித்தார்.
ஹிட்லர் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் நாள்பட்ட வாயு போன்றவை அவருக்கு இருந்தன. ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் அதிக அளவு வாயுவை வெளியேற்றுவதற்காக அவர் மேசையை விட்டு தனியே செல்ல வேண்டியிருந்தது.
அவரது வழக்கத்திற்கு மாறான உணவுப்பழக்கத்தால் அவரது நிலை மோசமடைந்தது. பன்றியின் இறைச்சியைச் சாப்பிடுவதை மனித சடலத்தை உண்பதற்கு இணையானது என்று கூறி 1931-இல் அதைக் கைவிட்டிருந்தார். பின்னர் நீர் நிறைந்த காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடத் தொடங்கியிருந்தார்.
ஹிட்லர் அத்தகைய உணவை சாப்பிடுவதைப் பார்த்த மருத்துவர் மோரெல், அதன் விளைவுகளை ஆய்வு செய்தார். “மலச்சிக்கல், அதிக வாயு போன்றவை எனக்கு முன்பு எப்போதாவது ஏற்பட்ட அளவில் உருவாகின” என்று அவர் எழுதியிருக்கிறார். ஹிட்லரின் அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தக்கூடிய அதிசய மருந்துகள் தன்னிடம் இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
டாக்டர் கஸ்டரின் வாயு எதிர்ப்பு மாத்திரைகள் எனப்படும் சிறிய கறுப்பு மாத்திரைகளைக் கொண்டு தனது மருத்துவத்தை மோரெல் தொடங்கினார். ஹிட்லர் ஒரு நாளைக்கு பதினாறு மாத்திரைகளை எடுத்துக் கொண்டார். அந்த மருந்துகள் தற்காலிகமாக ஹிட்லரின் வாயுவைத் தணித்த போதிலும் கவனக்குறைவை அதிகரித்தன. தோலில் சுருங்கங்களை ஏற்படுத்தின.
அடுத்ததாக முட்டாஃப்ளோர் எனப்படும் ஈ.கோலை பாக்டீரியா மருந்தை மோரெல் பரிந்துரைத்தார். இது ஹிட்லரின் குடல் பிரச்னைகளை மேலும் அதிகரிக்க விடாமல் தடுத்தன. உண்மையில் மருத்துவரின் பணியில் ஹிட்லர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனால் நாஜி அமைப்பின் நெருங்கிய உள் வட்டத்தில் சேர அவரை அழைத்தார். அதன் பிறகு எப்போதும் ஹிட்லருடனேயே இருந்தார் மோரெல்.
ஹிட்லர் வயிற்றுப் பிடிப்பு மாத்திரமல்லாமல், காலை நேரத் தள்ளாட்டம் எனப்படும் சோர்வினாலும் அவதிப்பட்டு வந்தார். இதைத் தணிக்க, மோரெல் அவருக்கு தங்கப் படலப் பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த தூளில் இருந்து உருவாக்கிய ஒரு திரவத்தைச் செலுத்தினார். இந்த மருந்தில் உள்ள மூலப் பொருள் என்னவென்பதை அவர் யாருக்கும் சொல்லவில்லை.
ஆனால் செலுத்தப்படும் ஒவ்வொரு முறையும் அது ஹிட்லரின் உடலில் அதிசயங்களைச் செய்தது. சில நிமிடங்களிலேயே ஹிட்லர் தனது படுக்கையில் இருந்து புத்துணர்ச்சியுடனும் எழுந்தார்.
நாஜி அமைப்பைச் சேர்ந்த எர்ன்ஸ்ட்-குந்தர் ஷென்க் என்ற மருத்துவருக்கு மோரெலின் அதிசய சிகிச்சை முறைகளில் சந்தேகம் ஏற்பட்டது. ஒரு பாக்கெட்டைக் கைப்பற்றி ஆய்வகத்தில் சோதனை செய்தபோது, அதில் ஆம்பெட்டமைன் இருப்பது தெரியவந்தது. தற்காலத்தில் இது போதைப்பொருளாகக் கருதப்படுகிறது.
மருந்துகள் வேலை செய்யும் வரை, ஹிட்லருக்கு அவற்றால் தொந்தரவு ஏதும் ஏற்படவில்லை. அவர் தனது உடல்நலப் பிரச்சினைகள் அனைத்தையும் மருத்துவர் மோரெலின் கைகளில் முழுவதுமாக ஒப்படைத்துவிட்டார். முற்றிலுமாக அவரது மருத்துவத்தைச் சார்ந்து வாழ்வதற்கு வெகுகாலத்துக்கு முன்பே இது நடந்துவிட்டது.
டெஸ்டோஸ்டிரோன், ஓபியேட்ஸ், மயக்க மருந்துகள் மற்றும் மலமிளக்கிகள் உட்பட எண்பது வெவ்வேறு மருந்துகள் ஹிட்லரின் உடலில் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் சோவியத் ரஷ்யா மீதான தாக்குதலை அவர் நடத்திக் கொண்டிருந்தார்.
மருத்துவர் மோரெலின் மருத்துவ குறிப்பேடுகளின்படி பார்பிட்யூரேட்டுகள், மார்பின், காளை விந்து போன்றவற்றையும் ஹிட்லரின் உடலில் அவர் செலுத்தியிருக்கிறார்.
இவை அனைத்துக்கும் மேலாக தற்காலத்தில் மிக மோசமான போதை மருந்தாகக் கருதப்படும் கொகைனையும் ஹிட்லருக்கு அளித்திருக்கிறார் மோரெல். 1930 களில் ஜெர்மனியில் சில நோய்களுக்கு எப்போதாவது அது பயன்படுத்தப்பட்டது. ஆனால் எப்போதும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான செறிவூட்டலில் மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கண் சொட்டு மருந்து மூலம் ஹிட்லருக்கு கொகைனை கொடுக்கத் தொடங்கினார் மோரெல். பின்னர் ஹிட்லரின் உற்சாகத்தால், பத்து மடங்கு அளவு கொகைனை மருந்தில் சேர்த்தார். இத்தகைய செறிவுமிக்க மருந்த பிற்காலத்தில் மன ரீதியாக ஹிட்லரின் நடத்தை மாறுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனால் ஹிட்லருக்கு அந்த மருந்தை மிகவும் பிடித்திருந்தது. 2012 இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, ஒரு கட்டத்தில் ஹிட்லர் அந்த மருந்துக்காக ஏங்கத் தொடங்கியதாகத் தெரிய வருகிறது. இது தீவிரமான போதைப் பழக்கத்துக்கான அறிகுறியாகும்.
கண்வழியான சொட்டு மருந்தைத் தொடர்ந்து, சைனஸ் பிரச்னைக்காவும், தொண்டையைச் சரி செய்யவும் தூள் வடிவிலான கொகைனை ஹிட்லர் உறிஞ்சத் தொடங்கினார்.
இவற்றையெல்லாம் விட ஹிட்லருக்கு மற்றொரு முக்கியமான பிரச்னை இருந்தது. அது பாலியல் உந்துதல் குறைபாடு. மருத்துவர் கொடுத்த மருந்துகள் எதுவும் இந்தக் குறைபாட்டை மட்டும் சரிசெய்யவில்லை. இந்தக் குறைபாட்டைச் சமாளிப்பதற்காக மருத்துவர் மோரெல் ஹிட்லருக்கு வீரியம் மிக்க ஊசி போடத் தொடங்கினார்.
இவை இளம் காளைகளின் புரோஸ்டேட் சுரப்பிகளில் இருந்து எடுக்கப்பட்ட திரவத்தைக் கொண்டிருந்தன. டெஸ்டோஸ்டிரோனில் இருந்து பெறப்பட்ட டெஸ்டோவைரான் என்ற மருந்தையும் மோரெல் பரிந்துரைத்தார். தனது காதலியும் பின்னாளில் மனைவியுமான ஈவா பிரானுடன் இரவைக் கழிப்பதற்கு முன் ஹிட்லர் தானே இந்த ஊசி போட்டுக் கொள்வார்.
இத்தகைய மருந்துகளை உட்கொண்டது ஹிட்லரின் ஒழுங்கற்ற நடத்தைக்கு வழிவகுத்தது. இத்தாலியில் ஹிட்லருக்கும் முசோலினிக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது இது வெளிப்படையாகத் தெரிந்தது. போரில் அணி மாறிவிட வேண்டாம் என்று முசோலினியை அவர் வற்புறுத்தியபோது, வெறித்தனமாக மாறியிருந்தார்.
‘முசோலினியைப் பார்க்கச் சென்ற ஹிட்லருக்கு மோரெல் சில மாத்திரைகளைக் கொடுத்தார் என்று நாம் உறுதியாக நம்பலாம்” என்கிறார் வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் எவன்ஸ்.
மனைவி ஈவா பிரானுடன் ஹிட்லர்
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரும்போது, ஹிட்லரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவர் முற்றிலுமாக மருந்துகளைச் சார்ந்திருந்தார். மோரலை ஒரு ஊசி குத்தும் போலி மருத்துவர் என்று ஹிட்லரின் மனைவி ஈவா பிரான் குற்றம் சாட்டினார். அந்த நேரத்தில் ஹிட்லர் மருத்துவரின் அடிமையாக மாறியிருந்தார். ஆயினும்கூட தனது அன்புக்குரிய ஹிட்லரை மோரெல் ஒருபோதும் பிரியவில்லை. கிட்டத்தட்ட இறுதி வரை அவருடன் அவரது பெர்லின் பதுங்கு குழியில் இருந்தார்.
போர் முடிந்த பிறகு மருத்தவர் மோரெல் அமெரிக்கர்களால் கைப்பற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டார். அவர் மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்படவில்லை. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே 1948-ஆம் ஆண்டு பக்கவாதத்தால் இறந்தார். ஹிட்லரின் அசாதாரண போதைப் பழக்கத்தை வெளிப்படுத்தும் மருத்துவ குறிப்பேடுகள் அவரிடமிருந்தே கிடைத்தன.
முரண் என்னவென்றால், ஹிட்லரின் ஆரோக்கியத்துக்கு உதவியவர் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், ஹிட்லரின் வீழ்ச்சிக்கு அவரை விட கூடுதலாக வேறு யாரேனும் செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
மேற்கண்ட தகவல்கள் கில்ஸ் மில்டன் எழுதிய “When Hitler Took Cocaine” என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.