கோவிட் தொற்றுக்கு தங்களை வலிந்து உள்ளாக்கி கொள்ளும் சீன இளைஞர்கள் – என்ன காரணம்?
சீனாவில் வசித்துவரும் சென் என்பவரின் 85வயது தந்தை கடந்த டிசம்பர் மாதம் கோவிட் தொற்றுக்கு உள்ளானார். ஆனால் அவரது சிகிச்சைகாக உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைப்பதோ அல்லது உரிய மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதோ சாத்தியமற்றதாக இருந்தது.
பெய்ஜிங்கில் உள்ள சயாங்க் மருத்துவமனைக்கு அவர்கள் சென்றனர். ஆனால் அவர்களை ’மருத்துவமனை தாழ்வாரத்தில் அமர்ந்து ஐ.வி டிரிப்ஸ் ஏற்றிக் கொள்ளுங்கள் அல்லது வேறு மருத்துவமனைக்குச் சென்றுவிடுங்கள்” என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் இதுதான் சீனாவின் இன்றைய நிலையாக உள்ளது.
”சிகிச்சைக்குத் தேவைப்படும் படுக்கை வசதிகளோ, சுவாச மீட்பு கருவிகளோ, மற்ற எந்த ஒரு மருத்துவ சாதனங்களோ அந்த மருத்தவமனையில் காணப்படவில்லை” என்கிறார் தனது 85 வயது தந்தையை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற சென்.
அதன்பின் ஒருவழியாக தங்களுக்குத் தெரிந்தவர்களின் மூலம் மற்றொரு மருத்துவமனையில் தனது தந்தைக்கு சிகிச்சைகாக இடம் கிடைத்ததாகவும் ஆனால் அப்போது அவருக்கு தீவிரமான நுரையீரல் தொற்று ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது தனது தந்தை தொற்றிலிருந்து மீண்டு வந்துவிட்டாலும், வரும் காலத்தில் அவருக்கு மீண்டும் தொற்று ஏற்படும் சூழலில் அது அவரது உயிரைக்கூட பறித்துவிடலாம் எனவும் சென் கவலை கொள்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், “மூன்று ஆண்டுகளாக கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து கட்டுபாட்டு விதிகளும் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளன. எந்தவொரு முன் ஆயத்தப்பணிகளும் ஏற்பாடுகளும் இல்லாமல் தற்போது சீன அரசு கோவிட் கட்டுபாடுகளைத் தளர்த்தியுள்ளது.
இது யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் தீவிர நோய்ப் பரவல் ஏற்படுவதற்குக் காரணமாக அமையப் போகிறது. இதனால் முதியவர்கள் தங்களது வாழ்நாட்களை எண்ண வேண்டிய சூழல் ஏற்படும் என்று தனது வருத்தத்தைத் தெரிவிக்கிறார் சென்.
சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் முதியவர்கள்
சர்வதேச போக்குவரத்தைத் தொவங்குவதற்காக சீன அரசு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) முதல் தங்களது ஜீரோ-கோவிட் கட்டுபாடு விதிகளைத் திரும்ப பெறுகிறது. இதைத் தொடர்ந்து சீனாவின் எல்லைகள் திறக்கப்படுகின்றன. எந்தவொரு தெளிவான திட்டமிடலும் இல்லாமல் சீன அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால் பெரும்பான்மையான சீன குடும்பங்கள் அச்சத்தில் உள்ளன.
ஆனால் அதேநேரம் சீனாவின் இளைஞர்கள் இதை மாற்றுகோணத்தில் பார்க்கின்றனர். தங்களது பெயர்களைக் குறிப்பிட விரும்பாத சில இளைஞர்கள் பிபிசியிடம் பேசுகையில், தாங்கள் வேண்டுமென்றே தங்களை கோவிட் தொற்றுக்கு உள்ளாக்கிக் கொள்வதாக கூறுகின்றனர்.
இயல்பு நிலைக்கு திரும்பும் சீன மக்கள்
ஷாங்காய் நகரைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் தன்னை வேண்டுமென்றே கோவிட் தொற்று பாதிப்புக்கு உள்ளாக்கிக் கொண்டார்.
”நான் எனது விடுமுறைக் கால திட்டத்தை மாற்றி கொள்ள விரும்பவில்லை. எனது விடுமுறை நாட்களின் போது எனக்கு தொற்று ஏற்பட்டுவிட்டால் என்னால் அந்த நாட்களை முழுமையாகக் கொண்டாட முடியாமல் போய்விடும். அதனால் நான் இப்போதே என்னை கோவிட் தொற்றுக்கு உள்ளாக்கிக் கொண்டேன்.
இதனால் விடுமுறை நாட்கள் வருவதற்கு முன்பாகவே நான் குணமடைந்து விடுவேன். மேலும் விடுமுறை கொண்டாட்டத்தின்போது எனக்கு மீண்டும் தொற்று ஏற்படாது’ என்று கூறும் அந்த இளைஞர், ‘அதேசமயம் தொற்று ஏற்படுத்திக் கொண்ட பின் தனக்கு ஏற்பட்ட கடுமையான தசைவலியை எதிர்ப்பார்க்கவில்லை என்றும் தொற்றுக்குரிய பாதிப்புகள் அதிகமாகக் காணப்பட்டது’’ என்றும் குறிப்பிடுகிறார்.
ஷாங்காய் நகரைச் சேர்ந்த மற்றொரு 26 வயது இளம்பெண் ஒருவர் பேசுகையில், ‘தனக்கு கோவிட் தொற்று ஏற்பட வேண்டுமென்பதற்காக ஏற்கெனவே தொற்று பாதிப்புக்கு உள்ளான தனது தோழியைச் சந்திக்கச் சென்றதாக’ கூறுகிறார்.
ஆனால் தான் “எதிர்பார்த்தைவிட அதிகமான பாதிப்புகளை கோவிட் தொற்று தனக்கு ஏற்படுத்தியது, அதிலிருந்து மீண்டு வருவது கடுமையாக இருந்தது,” என்று அந்தப் பெண் கூறுகிறார்.
’சாதாரணமாக சளி ஏற்படுவதைப் போன்றுதான் இருக்குமென நினைத்தேன், ஆனால் அது வலி மிகுந்ததாக இருந்தது’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
வடக்கு ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள ஜியாஷிங் பகுதியில் அரசு நடத்தி வரும் தொழிலில் பணிபுரிந்து வரும் 29 வயது பெண் ஒருவர், ’நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் செய்தி அறிந்ததும் தான் மிகவும் ஆச்சரியமடைந்ததாகவும் சீனாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்வதற்குத் தான் ஆயத்தமாகி வருவதாகவும்’ கூறுகிறார்.
வாழ்க்கையின் இயல்பான நாட்கள் மீண்டும் வரவேண்டுமெனக் கூறும் அவர், அதேநேரம் முதியவர்களின் நிலை குறித்து தனது வருத்தத்தையும் தெரிவிக்கிறார். தனது தாத்தா கோவிட் தொற்றுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலைக்குச் சென்றபோதுகூட அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
“அதற்குக் காரணம் மருத்துவமனைகளின் நிலை மிகவும் மோசமானதாக இருந்தது. அங்கே உயிரிழந்தவர்களுடைய சடலங்களின் எண்ணிக்கை நிரம்பி வழிந்து கொண்டிருந்தது எங்களது கவலையை அதிகரித்தது” என்கிறார் அவர்.
தான் கோவிட் தொற்றுக்கு உள்ளாக விரும்பவில்லை என்று கூறும் அவர், தனது கணவருக்கு தொற்று ஏற்பட்ட நேரத்தில் தூங்கும்போதுகூட தான் முகக்கவசம் அணிந்துகொண்டு தூங்கியதாக அவர் கூறுகிறார்.
இந்த நிலையில் சீனாவில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக சீன அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் ‘குலோபல் டைம்ஸ்’ செய்தித் தாள் அறிவித்துள்ளது.
ஆனாலும் கூட இதுவோர் அசாதாரணமான இயல்பு நிலையாகவே பெரும்பான்மையான மக்களால் பார்க்கப்படுகிறது.
சீனாவை சேர்ந்த மற்றொரு பெண் லூயி. அவருடைய கணவர் கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் இதுவரை கோவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் “வீட்டை எப்போதும் சுத்தமாகப் பராமரித்து வந்தபோதும் நாங்கள் இருவரும் கோவிட் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோம்,” என்கிறார்.
தங்களது மகளுக்கும் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொற்று பாதிப்பிலிருந்து மீள்வதற்காக Paxlovid, Pfizer’s போன்ற மருந்துகளை பெய்ஜிங்கின் பல இடங்களில் தேடியதாகவும் இறுதியில் கள்ளச்சந்தையில் அதிகப் பணம் கொடுத்து அந்த மருந்துகளை தாங்கள் பெற்றதாகவும் லூயி கூறுகிறார்.
அதேபோல் பெய்ஜிங்கை சேர்ந்த வாங் என்னும் மற்றொரு பெண், Paxlovid மருந்துகள் சந்தையில் அதிக விலைக்குச் செல்வதற்கு முன்பாக தான் அந்த மருந்துகளை மொத்தமாக வாங்கி வீட்டில் வைத்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.
கோவிட் கட்டுபாடுகளை திரும்பப் பெற்றிருப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு வேண்டுமானால் நன்மை சேர்க்கலாம் என்றும் அந்தப் பெண் குறிப்பிடுகிறார்.
ஆனால் சீனாவின் நகரப் பகுதிகளைத் தவிர்த்து கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசின் இந்த அறிவிப்புக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதை அறிவது சற்று கடினமாக இருக்கிறது.
‘மோசமான இந்த கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஜீரோ-கோவிட் கட்டுப்பாட்டு முறையை அறிவித்தனர். மூன்று ஆண்டுகளாக அது நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது திடீரென அதை மொத்தமாகத் திரும்ப பெறுவது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது எனத் தெரியவில்லை. படிப்படியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம்’ எகிறார் 52வயதான பெய்ஜிங்கை சேர்ந்த பெண் லீ.
’2022ஆம் ஆண்டு எங்களுக்கு மிகவும் மோசமான ஓர் ஆண்டாக இருந்தது. இப்போது நாங்கள் கடவுளிடம் வேண்டிக்கொள்வது எல்லாம் 2023ஆம் ஆண்டு அதைவிட மோசமாக அமைந்துவிடக் கூடாது என்பது மட்டுமே’ என்று கவலையுடன் கூறுகிறார் லீ.