மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ஆற்றில் அமுக்கி கணவர் கொடூரக் கொலை: காதலனுடன் மனைவி வெறிச்செயல்!!
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த வரதய்யபாளையம் பாண்டூர் பகுதியில் உள்ள தெலுங்கு கங்கை கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடப்பது கடந்த 2ம் தேதி தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்ரீசிட்டி போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என தீவிரமாக விசாரித்து வந்தனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு: சடலமாக கிடந்தவர் நெல்லூர் மாவட்டம் கொலகமுடி கிராமத்தை சேர்ந்த வெங்கையா (40). இவரது மனைவி முகுந்தா (34). இவர்கள் ஸ்ரீசிட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதேபோல் தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் இல்லந்து பகுதியை சேர்ந்தவர் உதய்சாய் (35). இவரது மனைவி உஷா(30). இவர்கள் இருவரும் ஸ்ரீசிட்டி பகுதியில் வெங்கையாவின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு வந்துள்ளனர். உதய்சாய், வெங்கையா ஆகிய இருவரும் அங்குள்ள பட்டறை தொழிற்சாலையில் வேலையில் சேர்ந்தனர். ஒரே தொழிற்சாலையில் வேலை பார்ப்பதாலும், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என்பதாலும் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அடிக்கடி ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வந்து செல்வது வழக்கமாம்.
இந்நிலையில் வெங்கையாவின் மனைவி முகுந்தாவுக்கும் உதய்சாய்க்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவன் வீட்டில் இல்லாதபோது உதய்சாயை வரவழைத்து முகுந்தா உல்லாசமாக இருந்துள்ளார். இவ்வாறு இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த வெங்கையா மனைவியை கண்டித்தார். இருப்பினும் மனைவி தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.
இதனிடையே உதய்சாயின் மனைவி உஷா, பிரசவத்திற்காக கடந்த மாதம் தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் முகுந்தாவை தனது வீட்டுக்கு அழைத்து உதய்சாய் ஜாலியாக இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் 30ம்தேதி கள்ளக்காதலை கைவிடும்படி கூறி மனைவி முகுந்தாவுக்கு வெங்கையா மீண்டும் எச்சரித்தார். அப்போது இவர்களுக்குள் கடும் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து முகுந்தா தனது கள்ளக்காதலன் உதய்சாயிடம் தெரிவித்தார். இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள வெங்கையாவை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலர்கள் முகுந்தாவும், உதய்சாயும் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கடந்த 1ம்தேதி இரவு உதய்சாய், வெங்கையாவிடம் ‘புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மது விருந்து வைக்கிறேன், என்னுடன் வா’ என அழைத்துள்ளார். அதை நம்பிய வெங்கையாவை தனது டூவீலரில் அழைத்துக்கொண்டு ஸ்ரீசிட்டி பகுதியில் உள்ள தெலுங்கு கங்கை கால்வாய் அருகே உதய்சாய் சென்றுள்ளார். அங்கு சென்றபிறகு ஏற்கனவே அதிகளவு தூக்க மாத்திரை கலந்து வைத்திருந்த மதுபானத்தை வெங்கையாவுக்கு கொடுத்துள்ளார். இதை குடித்த அவர் சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து திட்டமிட்டபடி அங்கு வந்த முகுந்தாவுடன் சேர்ந்து உதய்சாய் வெங்கையாவை தரதரவென இழுத்துச்சென்று கால்வாயில் அமுக்கி மிதித்து கொலை செய்துள்ளார். அதன்பின்னர் சடலத்தை கரையில் வீசிவிட்டு இருவரும் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர். போலீசார் விசாரணையில் மேற்கண்ட விவரம் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீசிட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கணவனை கொன்ற முகுந்தா மற்றும் அவரது கள்ளக்காதலன் உதய்சாயை நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரையும் சத்தியவேடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.