சீனாவில் சர்வதேச எல்லைகள் திறப்பு வெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் ரத்து!!
கட்டாய தனிமைப்படுத்துதல் ரத்து செய்யப்பட்ட பின் முதல் முறையாக 387 வெளிநாட்டு பயணிகள் விமானம் மூலம் சீனாவுக்கு வந்தனர். சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு முதல் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அரசு விடுதி, காப்பகங்களில் 2 வாரம் கட்டாய தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டனர். பின்னர் அது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. இதில் 3 நாட்கள் அவர்கள் கண்காணிப்பில் மட்டும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
அரசின் பூஜ்ய கொரோனா கொள்கையை எதிர்த்து மக்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து, பூஜ்ய கொரோனா கொள்கையை அரசு விலக்கியது. இதன் பின் அங்கு கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஜன.8ம் தேதியில் இருந்து(நேற்று) வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்துதலை ரத்து செய்வதாக சீனா அறிவித்தது. கொரோனா விதிகளில் புதிய தளர்வு கொண்டுவரப்பட்ட நிலையில், கனடாவின் டொரோன்டோ மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து நேற்று மொத்தம் 387 பேர் சீனாவின் குவாங்ஸூ, சென்ஞ்சுவான் விமான நிலையங்களில் வந்திறங்கினர். அதே போல் சர்வதேச எல்லைகளும் திறக்கப்பட்டுள்ளன.
ஹாங்காங் சிறப்பு நிர்வாக மண்டலத்தில் இருந்து சீன நில பகுதிக்கு செல்வதற்கான போக்குவரத்தும் துவங்கியுள்ளது. இதனால் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் சீனாவில் தங்களது உறவினர்களை காணும் ஆர்வத்தில் ஹாங்காங் விமான நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் மீறல் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT