இந்தியா-வங்கதேச எண்ணெய் குழாய் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு திறப்பு: அதிகாரி தகவல்!!
இந்தியா-வங்கதேசம் இடையேயான நட்புறவு எண்ணெய் குழாய் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரி தெரிவித்தார்.
இந்தியா வங்கதேசம் இடையே, நட்புறவு எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை கடந்த 2018, செப்டம்பர் 18 அன்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் மோடி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மொத்தம் 130 கிமீ தூரம் கொண்ட இந்த திட்டம் ரூ.377.08 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. அசாம், நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் சிலிகுரி டெர்மினலில் இருந்து வங்க தேசத்தின் பார்பதிபூர் டெப்போவுக்கு எரிபொருள் எடுத்து செல்லப்படும்.
இந்த திட்டத்தினால் வங்கதேசத்திற்கு எரிபொருள்கள் எடுத்து செல்வதற்கு போக்குவரத்து மற்றும் நேரம் பெருமளவு மிச்சமாகும். இந்நிலையில், நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அதிகாரி கூறுகையில்,‘‘இந்தியா வங்கதேச நட்புறவு குழாய் திட்டம் கடந்த டிசம்பரில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில், 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது அடுத்த மாதத்திற்குள் பணியை முடித்து வங்கதேசத்துக்கு எரிபொருள் அனுப்பப்படும். ஆண்டுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் எண்ணெய் குழாய் வழியே ஏற்றுமதி செய்யப்படும் ’’ என்றார்.