திருவனந்தபுரத்தில் பறவை காய்ச்சல் பரவியது 2 ஆயிரம் வாத்து, கோழிகளை கொல்ல முடிவு: முட்டை, இறைச்சி விற்பனைக்கும் தடை!!!
திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த கோழி மற்றும் வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதையடுத்து 2,000 வாத்து, கோழிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பறவை இறைச்சி, முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் அழூர் அருகே பெருங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்துப் பண்ணை உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான கோழி, வாத்துக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக இந்த பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான கோழிகளும், வாத்துகளும் திடீரென சுருண்டு விழுந்து இறந்தன.
அதைத்தொடர்ந்து இவற்றின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக போப்பாலில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நேற்று முன்தினம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவிய பண்ணையில் உள்ள வாத்து, கோழிகளையும், மேலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வாத்து, கோழிகளையும் கொல்ல தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக 2,000 பறவைகளை இன்று முதல் கொல்லத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. மேலும் நோய் பாதிக்கப்பட்ட பண்ணையின் 9 கிலோ மீட்டர் பகுதியில் பறவை இறைச்சி, முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர வெளிப்பகுதியில் இருந்து இங்கு முட்டை, இறைச்சி கொண்டு வரவும், இங்கிருந்து வெளியே கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.