;
Athirady Tamil News

அயோத்தி சிறையில் இருந்து விடுதலையான 98 வயது முதியவருக்கு பிரியா விடை கொடுத்த ஜெயில் ஊழியர்கள்!!

0

உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 98 வயதான ராம்சுரத் என்ற முதியவர் ஒரு வழக்கில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் அயோத்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை முடிந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் விடுதலை ஆக இருந்தார். ஆனால் மே மாத இறுதியிலேயே ராம் சுரத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து 90 நாட்கள் பரோலில் சென்றார்.

அதன்பிறகு தொற்று குணமாகி மீண்டும் சிறைக்கு சென்ற அவர் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆனார். விடுதலை ஆனதும் ஜெயில் ஊழியர்கள் அந்த முதியவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து பிரியா விடை கொடுத்து அனுப்பினர். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறைத்துறை டி.ஜி.பி.யின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட அந்த வீடியோவில், அயோத்தி சிறையில் மாவட்ட கண்காணிப்பாளர் சசிகாந்த் மிஸ்ரா புத்ரவாத், முதியவர் ராம் சுரத்தை காரில் அழைத்து செல்லும் காட்சிகள் இருந்தன. மேலும் அந்த வீடியோவில் மொழி பெயர்க்கப்பட்ட வாசகத்தில், 98 வயதான சகோதரர் ராம்சுரத்ஜியை அழைத்து செல்ல யாரும் வரவில்லை. எனவே அயோத்தி சிறை கண்காணிப்பாளர் அவருடைய காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்புகிறார் என கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ டுவிட்டரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், பல கருத்துக்களையும் பெற்றுள்ளது. அதில் ஒருவர், ராம்சுரத் எந்த வழக்கில், ஏன் சிறையில் அடைக்கப்பட்டார்?, விடுதலை ஆகும் போது அவர் கோவிலுக்கு செல்வார் என்று கூறுகிறார்கள். எனவே அவர் கோவில் பூசாரியாக இருக்கலாம்.

ஒருவேளை சனாதன தர்மத்திற்காக உறுதியாக நின்றிருக்க வேண்டும். அதற்காக அவர் தண்டிக்கப்பட்டிருக்கலாம் என கூறி உள்ளார். மற்றொரு பயனரின் பதிவில், 98 வயது முதியவரை சிறையில் வைத்திருப்பது நியாயமும் இல்லை, மனிதமும் அல்ல என கூறி உள்ளார். மேலும் ஒரு பதிவில், எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இது ஒரு அற்புதமான தருணம் என கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.