அரசாங்க நிதி பற்றிய குழு அதிருப்தி!!
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள், குழு முன்னிலையில் ஆஜராகாமை மற்றும் அது தொடர்பில் உரிய முறையில் அறிவிக்காமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் ஏகமனதாக அதிருப்தி வெளியிடப்பட்டது.
கடந்த டிசம்பர் 21ஆம் திகதி அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் ஆணைக்குழு அழைக்கப்பட்டிருந்தபோதும், அதன் உயர் அதிகாரிகள் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கு விளக்கமளித்து எழுத்துமூல சமர்ப்பனமொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்க நிதி பற்றிய குழு, ஆணைக்குழுவின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தது.
2021ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (05) கூடியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் முதலீடுகளை உருவாக்கும் நோக்கத்துக்காகக் கொண்டுவரப்பட்டது என்பதை வலியுறுத்திய குழு, இதுவரை மேற்கொண்டுள்ள பணிகளின் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன், முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது அதிக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் ஆலோசனை வழங்கியது.
பதிவுகள் மற்றும் சமர்ப்பிப்புக்கள் யாவும் ஒன்லைன் முறையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆணைக்குழு எதிர்பார்க்கும் நிலையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கு ஏன் முறையான ஒன்லைன் முறைமை அல்லது இணையத்தளம் ஒன்று கொண்டிருக்கவில்லையென்றும் குழு கேள்வியெழுப்பியது. இந்த விடயத்தைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குழு, ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தது.
அத்துடன், அறிக்கைகள் சமர்ப்பிப்பதில் காணப்படும் காலதாமதம் குறித்தும் குழு கேள்வியெழுப்பியது. வருடாந்த கணக்காய்வு அறிக்கையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும் அரசாங்க நிதி பற்றிய குழு, ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குப் பணித்தது. அதேநேரம், கசினோவை ஒழுங்குமுறைப்படுத்தல் குறித்த விடயத்தைக் கண்காணிப்பதற்கு அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் சந்திம வீரக்கொடி, எம்.ஏசுமந்திரன், மயந்த திசாநாயக மற்றும் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோரைக் கொண்ட உபகுழுவை நியமிப்பதாகவும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அறிவித்தார்.