உத்தரகாண்டில் புதையும் நிலையில் உள்ள ஜோஷிமத் நகர்- அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நகரம் ஜோஷிமத். உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத், ஹேம்குண்ட் சாகிப் போன்ற முக்கிய வழிபாட்டு தலங்களுக்கும், சர்வதேச பனிச்சறுக்கு சுற்றுலா தலமான அவுலிக்கும் நுழைவு வாயிலாக ஜோஷிமத் நகரம் திகழ்கிறது. இந்த ஜோஷிமத் நகரத்தின் நிலப்பகுதி தாழ்ந்து வருகிறது. சாலைகள் மற்றும் வீடுகளில் மிகப்பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு 4500 கட்டிடங்கள் உள்ளன. இதில் 610 கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு அவை வாழத் தகுதியற்றதாக மாறி உள்ளது. இந்த நிலையில் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலச்சரிவு புதைவு மண்டலமாக ஜோஷிமத் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்வால் பகுதி ஆணையர் சுஷில்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- ஜோஷிமத் நகரத்தில் கடந்த சில காலமாகவே நிலம் புதையும் நிகழ்வு நடந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக அதன் தீவிரம் அதிகரித்துள்ளது. 610 கட்டிடங்களில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகவும் சேதமடைந்த 60 வீடுகளில் வசித்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு அந்த நகரிலேயே பாதுகாப்பான சில கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 90 குடும்பங்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. சுமார் 1500 பேர் தங்கும் வகையில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்போதைய நிலையில் மக்களின் பாதுகாப்புக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். மறு நிர்மாணம் முதல் மறு சீரமைப்பு வரையிலான நீண்ட கால நடவடிக்கைகள் ஆய்வில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பாக சமோலி மாவட்ட கலெக்டர் ஹிமான்சு குரானா கூறுகையில், “ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். சேதமடைந்த வீடுகளிலேயே தொடர்ந்து தங்கி இருப்பது மக்களுக்கு பாதுகாப்பானது அல்ல. வேறு இடங்களுக்கு இடம்பெயர விரும்புவோருக்கு அரசு சார்பில் ரூ.4 ஆயிரம் என 6 மாதங்களுக்கு வழங்கப்படும்” என்றார்.
கலெக்டரின் வேண்டுகோளை ஏற்று அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ஜோஷிமத் நகரில் 9 வார்டுகள் வாழத் தகுதியற்ற அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜோஷிமத் நகரம் புதைந்து வருவது தொடர்பாக ஆராய பிரதமர் அலுவலகத்தில் உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது. பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி சபை செயலாளர் ராஜீவ் கவுபா, மத்திய அரசின் உயர் அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஜோஷிமத் மாவட்ட அதிகாரிகள், உத்தரகாண்ட் மாநில அதிகாரிகள் காணொலி மூலம் பங்கேற்றனர்.
இந்த பிரச்சினையை எதிர்கொள்வதற்கான குறுகிய கால, நீண்ட கால திட்டங்களை வகுப்பதில் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு மத்திய அமைப்புகள், நிபுணர்கள் குழு ஆகியவை உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஜோஷிமத் நகரின் தற்போதைய நிகழ்வுகளை நேரில் ஆய்வு செய்வதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இன்று நேரில் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு குழு, மாநில பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்கள் ஜோஷிமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் உத்தரகாண்ட் தலைமை செயலாளர் சுக்பிர் சிங் சாந்து கூறுகையில், “ஜோஷிமத் சூழலை மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அங்கு சுமார் 350 மீட்டர் அகல நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன” என்றார். இந்த கூட்டத்தில் பிரத மரின் முதன்மை செயலா ளர் பி.கே.மிஸ்ரா கூறுகை யில், “இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மேலாண்மை மையம், இந்திய புவியியல் ஆய்வு மையம், ரூர்கி இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம், வாடியா இமயமலை நிலவியல் மையம், தேசிய நீரியல் மையம், மத்திய கட்டிட ஆய்வு மையம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அந்த குழு ஆய்வு செய்து பரிந் துரைகளை வழங்கும். ஜோஷிமத்தில் பாதிக்கப் பட்ட குடும்பங்களுடன் மாநில அரசு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். ஜோஷிமத் பகுதியில் மறு கட்டமைப்பு பணிகளுக்கான திட்டம் விரைவில் வகுக்கப்பட வேண்டும்” என்றார். இந்த நிலையில் ஜோஷி மத் நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இன்று நேரில் செல்கிறார் கள். அவர்கள் அளிக்கும் பரிந்துரைகள் மாநில அரசுக்கு வழங்கப்பட உள்ளன. இதேபோல் ஜோஷிமத் போலவே நைனிடால், உத்தரகாசி ஆகிய நகரங்களும் புதையும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. நைனிடால் நகரத்தில் அதிக அளவில் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. மேலும் இங்கு நில அதிர்வு சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்த நகரங்களின் தரைத்தளம் மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே அவையும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக குமாவுன் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் பகதூர் சிங் கோட்வியா தெரிவித்து உள்ளார்.