பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்; ஆளுநர் ரவி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: நாராயணசாமி வலியுறுத்தல்!!
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய நாராயணசாமி, சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டிற்கு கருப்பு நாளாகும். ஆளுநர் ரவி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினார். மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை குறித்து விவரம் தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையை விமர்சனம் செய்ய அண்ணாமலைக்கு தகுதி இல்லை எனவும் நாராயணசாமி கண்டனம் தெரிவித்தார்.
போதைப்பொருட்களை ரங்கசாமி அனுமதிக்கிறார்:
புதுச்சேரியில் போதை பொருட்களை ரங்கசாமி அனுமதித்து வருகிறார் என நாராயணசாமி குற்றம்சாட்டினார். போதைப்பொருள் விற்பனையை தடுக்க ரங்கசாமி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறிய அவர், புதுச்சேரியில் புதிதாக தோன்றியுள்ள ரெஸ்டா பார்களை தடை செய்ய வேண்டும்; இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார். கோமாளிகள் ஒன்று சேர்ந்து புதுச்சேரியில் ஆட்சி நடத்துகிறார்கள் எனவும் நாராயணசாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.
பேரவையில் வரம்பு மீறி செயல்பட்ட ஆளுநர் ரவி:
இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஒரு மாநில அரசின் அச்சடிக்கப்பட்ட உரையை உள்ளது உள்ளப்படியே வாசிப்பதுதான் கவர்னர் உரையின் மரபாகும். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் உரையில் அது மீறப்பட்டிருக்கிறது. அவர், திராவிட மாடல் என்ற வார்த்தையை மட்டுமின்றி சமூக நீதி, சுயமரியாதை, மத நல்லிணக்கம், சமத்துவம் போன்ற வார்த்தைகளையும் பெரியார், அண்ணா, அம்பேத்கார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களையும் வாசிக்காமல் தவிர்த்திருக்கிறார். அச்சடிக்கப்பட்ட வாசகங்களை தவிர்த்திருப்பதோடு, அச்சடிக்கப்படாத வாசகங்களை அவர் பயன்படுத்தியிருப்பதும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். இது ஆளுநரின் வரம்பு மீறிய செயலாகும் என்று அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.