உலகின் மிக முக்கிய நீர்வழிப்பாதையான சூயஸ் கால்வாயில் மீண்டும் சரக்கு கப்பல் தரை தட்டியது: இழுவை படகுகள் மூலம் மீட்பு!!
உலகின் மிக முக்கிய நீர்வழிப்பாதையான சூயஸ் கால்வாயில் மீண்டும் ஒரு சரக்கு கப்பல் தரை தட்டியது. எகிப்தில் அமைந்துள்ள சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கிய நீர்வழிப்பாதையாக இருந்து வருகிறது. எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் பல நாடுகளில் இருந்து இந்த கால்வாய் வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன. எனவே உலகளாவிய விநியோகச் சங்கிலியின் முக்கிய இணைப்பாக சூயஸ் கால்வாய் விளங்குகிறது.
இந்நிலையில், நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.வி. குளோரி என்ற சரக்கு கப்பல், சூயஸ் கால்வாயில் இஸ்மாலியா மாகாணத்தில் உள்ள கந்தாரா நகருக்கு அருகே நேற்று தரை தட்டியது. நேற்று முன்தினம் மோசமான வானிலை நிலவியதால் கால்வாயில் அலைகள் எழும்பியதன் காரணமாக கப்பல் தரை தட்டியதாக அதிகாரிகள் கூறினர். உடனடியாக 3 இழுவை கப்பல்கள் மூலம், தரை தட்டிய கப்பலை மீண்டும் கடலில் மிதக்க விடும் பணியில் கப்பல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தீவிர முயற்சிக்குப் பின் குளோரி கப்பல் கடலில் மிதக்க விடப்பட்டிருப்பதாக அக்கப்பல் நிறுவன அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஆனால் கப்பல் தரை தட்டியதால் நேற்று அவ்வழியாக செல்ல இருந்த 51 கப்பல்களின் போக்குவரத்து பாதிக் கப்பட்டதா இல்லையா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 2021ம் ஆண்டு சூயஸ் கால்வாயின் ஒற்றைப் பாதை தடத்தில் எவர் கிவன் எனும் பிரமாண்ட சரக்கு கப்பல் குறுக்கு நெடுக்காக தரை தட்டி நின்றதால் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்து, உலகளாவிய விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.