பழங்குடிகளால் கொண்டாடப்படும் பிரேசில் அதிபர் சில்வா – பின்னணி என்ன?
கடந்த அக்டோபரில் போல்சோனாரோவை 2% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரேசில் அதிபராக பதவி ஏற்றார் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா. இதன்மூலம் பிரேசிலில் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்த வலதுசாரி தலைவர் ஜெயிர் போல்சோனாரோவின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இடதுசாரி தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, யூனியன் தலைவராக இருந்தவர். பிரேசிலின் அதிபராக 2003 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் பதவி வகித்தவர்தான் சில்வா. 2022-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போல்சோனாரோவை வெற்றிகொண்டு மூன்றாவது முறையாக அதிபராகி இருந்தார்.
இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு சில்வாவின் வெற்றியை எதிர்த்து பிரேசில் நாடளுமன்றம், உயர் நீதிமன்றத்தை போல்சோனாரோவின் ஆதரவாளர்கள் தாக்கி உள்ளது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவற்றுக்கிடையில், வலதுசாரிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரேசிலின் பழங்குடி மக்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார் சில்வா. அதற்கு முக்கியக் காரணம், சில்வா தனது நிர்வாகத்தில் பழங்குடி மக்களையும், அவர்களின் கொள்கைகளையும் முன்வைத்து பிரச்சார வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதேயாகும்.
அந்த வகையில் பிரேசிலில் பழங்குடி ஆர்வலர் சோனியா குவாஜாஜாரா தலைமையில் பழங்குடிகளுக்காக புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதில் ,சோனியா குவாஜாஜாரா பிரேசிலில் சுரங்கங்களுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தவர். பிரேசிலின் காடழிப்பு எதிராக நீண்ட வருடமாக போராடி வரும் மரினா சில்வா சுற்றுசூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும், பல்வேறு பழங்குடி ஆர்வலர்கள் அரசின் பழங்குடி நல வாரியங்களின் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பழங்குடி தலைவர்கள் பிரேசில் அமைச்சகத்திலும் இடம்பெற்று இருக்கிறார்கள். சில்வாவின் இந்தச் செயல், பிரேசில் பழங்குடி சமூகத்திடமிருந்து அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது.
போல்சோனாரோவின் ஆட்சிக் காலத்தில் அவரது நடவடிக்கைகள் பழங்குடி மக்களுக்கு எதிராக இருந்தது. 2019-ஆம் ஆண்டு இதுவரை இல்லாத காடழிப்பை அமேசான் காடுகள் சந்தித்தன. குறிப்பாக, பிரேசிலின் அமேசான் காடுகள் அழிப்பிற்கு எதிரான திட்டங்களை போல்சோனாரோ வகுக்கவில்லை. பழங்குடிங்களுக்கு எதிரான இனவாத வெறுப்பு பேச்சுகளில் போல்சோனாரா ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை பழங்குடி அமைப்புகள் வைக்கின்றன.
ஆனால், சில்வா அவர் பதவியேற்ற ஒரு மாதத்திலே அமேசான் காடுகளை பாதுகாக்கப்பதற்கான திட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும், சில்வா உருவாகியுள்ள பழங்குடிகள் அமைச்சகம் மூலம் காடழிப்பு குறைக்கப்படும் என்று தீர்க்கமாக நம்புகிறார்.
இதுமட்டுமல்லாது சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்ந்துள்ள சில்வா அதன் பாதிப்புகளை குறைக்கவும் திட்டங்களை வகுத்து வருகிறார். அதற்கு உதாரணமாகத்தான், எகிப்தில் நடந்த ஐ. நா.வின் காலநிலை மாநாட்டில் கலந்து கொண்ட சில்வா, “ அமேசானின் காடழிப்பை பூஜ்ஜியமாக்குவோம். அமேசான் இல்லாவிட்டால் காலநிலை பாதுகாப்பாக இருக்காது” என்று பேசினார். மேலும், உலக நாடுகளை காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராட வலியுறுத்தப் போவதாகவும் சில்வா தெரிவித்தார்.
இவ்வாறு கடந்த சில ஆண்டுகளாக பிரேசிலில் பறிக்கப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைகளையும், அழிக்கப்பட்ட அமேசான் மழை காடுகளை மீட்டெடுக்கவும் முன்னுதாரண செயல்பாடுகளில் சில்வா ஈடுபட்டு வருகிறார். எனினும், சுற்றுச்சூழல் தொடர்பாக சில்வாவின் முன் நீண்ட சவால்கள் காத்திருக்கின்றன. அவற்றை எல்லாம் பழங்குடிகளின் நாயகனாக தற்போது முன்னிறுத்தப்படும் சில்வா முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.