ராணுவத்துறையில் புதிய உச்சம் தொடும் பெண்: வெளிநாடு சென்று போர்ப்பயிற்சியில் ஈடுபடும் முதல் இந்திய பெண் வீராங்கனை அவனி சதுர்வேதி !!
இந்திய ராணுவத்தில் வீராங்கனைகள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றனர். வெளிநாட்டில் நடைபெறும் விமானப் படை போர் பயிற்சியில் இந்திய வீராங்கனை ஒருவர் முதல் முறையாக கலந்து கொள்ள இருப்பதுதான் தற்போது பலரது பாராட்டுகளை குவித்து வருகிறது.
இதுவரை பிற நாட்டு படைகளுடன் இணைந்து நடத்தப்பட்ட விமானப் படை பயிற்சிகளில் இந்திய விமானப் படை வீராங்கனைகள் பங்கேற்றதே இல்லை. இந்நிலையில், ஜப்பான் விமானப் படையுடன் இந்திய விமானப் படை மேற்கொள்ள இருக்கும் வீர் கார்டியன் பயிற்சியில் முதல் இந்திய பெண் வீராங்கனையாக அவனி சதுர்வேதி கலந்து கொள்ள உள்ளார்.
இந்த பயிற்சி ஜப்பானில் ஹியாகுரி விமானப்படை தளத்தில் ஜனவரி 16 முதல் 26 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்திய விமானப்படை வீராங்கனை அவனி சதுர்வேதி கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பது தான் பலரையும் ஆச்சிரியத்துடன் பாராட்ட வைத்துள்ளது.
அதிலும் சுகோய் ரக போர் விமானத்தில் பறந்தப்படி அவனி போர் பயிற்சியில் ஈடுபட இருப்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது. சுகோய் போன்ற விமானங்களை உலகளவில் வெறும் 12 நாடுகளில் மட்டும் தான் பெண் வீராங்கனைகள் இயக்கி வருகின்றனர். தற்போது இந்தியாவை பொறுத்தவரை வெளிநாடு சென்று போர் பயிற்சியில் ஈடுபட இருக்கும் முதல் பெண் வீராங்கனையாக அவனி சதுர்வேதி இருக்கிறார்.