மோசமான கின்னஸ் சாதனை ரூ.15 லட்சம் கோடியை 13 மாதத்தில் இழந்த மஸ்க்!!
உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த எலான் மஸ்க் 13 மாதங்களில் ரூ.15 லட்சம் கோடியை இழந்து மோசமான கின்னஸ் சாதனை படைத்து இருப்பது தெரிய வந்தது. உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தவர் டிவிட்டரை விலைக்கு வாங்கிய டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் ஆவார்.
இவரது சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் கோடியாக கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இருந்தது. அதன்பின் அவரது நிர்வாக குளறுபடி, தவறான முடிவுகளால் வெறும் 13 மாதங்களில் ரூ.15 லட்சம் கோடியை இழந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் 2023 ஜனவரியில் அவரது சொத்து மதிப்பு ரூ.11 லட்சம் கோடியாக குறைந்து விட்டது. இதனால் லூயிஸ் வுயிட்டான் நிறுவனர் அர்னால்ட் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை பெற்று விட்டார்.
அதை விட முக்கியமாக எலான் மஸ்க் தனிப்பட்ட முறையில் மிக அதிகமான சொத்தை குறுகிய காலத்தில் இழந்ததற்காக மோசமான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுள்ளார். 2021 நவம்பர் முதல் 2023 ஜனவரி வரை அவர் ரூ.15 லட்சம் கோடியை இழந்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2000ம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப முதலீட்டாளர் மசயோஷி சன் ஒரே ஆண்டில் ரூ.4.8 லட்சம் கோடியை இழந்ததுதான் செல்வத்தை இழந்ததில் கின்னஸ் சாதனையாக இருந்தது. அதை தற்போது எலான் மஸ்க் முறியடித்து விட்டார்.
ஜப்பான் நாட்டின் மசயோஷி சன்னின் மொத்த சொத்து மதிப்பு 2000ம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.6.3 லட்சம் கோடியாக இருந்தது. அதே ஆண்டு ஜூலையில் ரூ.1.5 லட்சம் கோடியாக சரிந்தது. இதனால் அவர் ஒரே ஆண்டில் ரூ.4.8 லட்சம் கோடியை இழந்து விட்டார். 23 ஆண்டுகளுக்கு பிறகு எலான் மஸ்க் 13 மாதங்களில் ரூ.15 லட்சம் கோடியை காலி செய்து விட்டார்.