கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட புயல் மழை!: 2.20 லட்சம் குடியிருப்புகளுக்கு மின்சேவை துண்டிப்பு.. 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு..!!
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பெய்து வரும் புயல் மழை அந்த மாகாணத்தையே புரட்டி போட்டுள்ளது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவின் தாக்கம் முடிவதற்குள் புயல் மழையும் கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பல மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கட்டிடங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தொடர் மழை, அதீத ஈரப்பதத்தில் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
புயல், மழை காரணமாக கலிஃபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு மின் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை புயல் முழுமையாக முடுக்கிபோட்டுள்ளது. ஏற்கனவே 3 கோடிக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கனமழை முதல் மிக கனமழை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் மேலும் கலக்கமடைந்துள்ளனர்.