இந்தோனேஷியாவின் மனித உரிமை மீறல்களுக்காக வருந்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவிப்பு!!
இந்தோனேஷியாவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்காக தான் வருந்துவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ இன்று தெரிவித்தள்ளார்.
1960களின் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான அடக்குமுறை, 1990களின் இறுதியில் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைளின் போதான இடம்பெற்ற சம்பவங்கள் உட்பட கடந்த கால மனித உரிமை மீறல்களுக்காக தான் வருந்துவதாக அவர் கூறினார்.
இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான அடக்குமுறைகளின்போது 5 லட்சத்துக்கும் அதிகமான இடதுசாரிகள் கொல்லப்பட்டனர்.
ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளல் ஒன்றாக இருந்த இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி மேற்படி கொலைகளின் பின் சிதைவடைந்தது. 1966 ஆம் ஆண்டு அக்கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டு, மாணவர்களின் வீதி ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் கடத்தப்பட்டதையும் ஜனாதிபதி ஜாக்கோ விடோடோ நினைவுபடுத்தினார். மேற்படி ஆர்ப்பாட்டங்களால் முன்னாள் ஜனாதிபதி சுஹார்ட்டோவின் 3 தசாப்தகால ஆட்சி முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
‘பல்வேறு சம்பவங்களின்போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்காக, ‘தெளிவான மனதுடனும் தூய்மையான இதயத்துடனும், இந்நாட்டின் தலைவர் என்ற வகையில் நான் வருந்துகிறேன்’ என தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று உரையாற்றுகையில் ஜனாதிபதி ஜாக்கோ விடோடோ கூறினார்.
1960கள் முதல் 2000கள் வரை நடந்த மேலும் 10 விடயங்களையும் அவர் குறிப்பிட்டார்.
பப்புவா மாகாணத்தில் நடந்த மனித உரிமை மீறல்களையும் அவர் ஏற்றுக்கொண்டார். 2003 ஆம் ஆண்டு, இந்தோனேஷிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, பலரை கொலை செய்ததாகவும், கடத்தல் சித்தவதைகளுக்கு உட்படுத்தியதாகவும் அதிகாரிகள் பலர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
எனினும், ஜனாதிபதி ஜாக்கோ விடோடோவின் கவலை தெரிவிப்பு போதுமானதல்ல என மனித உரிமை குழுக்கள் கூறியுள்ளன.
அது கவலையாக மாத்திரமல்லாமல், மன்னிப்புக் கோரலாக இருக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சiபின் இந்தோனேஷிய பணிப்பாளர் உஹ்மான் ஹமீத் கூறியுள்ளார்.