மருத்துவமனைக்கு வந்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த திரிபுரா முதல்வர்!!
பல் மருத்துவரான திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, பத்து வயது சிறுவனுக்கு வாய்க்குள் இருந்த நீர்க்கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினார்.
திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சஹா பொறுப்பேற்பதற்கு முன், ஹபானியா நகரில் உள்ள திரிபுரா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியவர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவர் முதல்வராக பதவியேற்றதை அடுத்து அவர் தனது மருத்துவப் பணியில் இருந்து விலகினார். இந்நிலையில், சுகந்தா கோஷ் என்பவரின் 10 வயது மகன் அக்ஷித் கோஷுக்கு வாய்க்குள் இருந்த நீர் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையை முதல்வர் மாணிக் சஹா வெற்றிகரமாக மேற்கொண்டார்.
இதற்காக திரிபுரா மருத்துவக் கல்லூரிக்கு இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வருகை தந்த அவர், அறுவை சிகிச்சை அரங்கிற்குச் சென்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டு புன்னகைத்தபடி அவர் வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணிக் சஹா, ”அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் தற்போது நலமாக உள்ளார். நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்தேன். ஆனாலும், சிரமமாக இருக்கவில்லை” என தெரிவித்தார்.
இந்த அறுவை சிகிச்சையின்போது பல் அறுவை சிகிச்சை மற்றும் முக அறுவை சிகிச்சை நிபுணர்களான மருத்துவர்கள் அமித் லால் கோஸ்வாமி, பூஜா தேப்நாத், ருத்ர பிரசாத் சக்ரவர்த்தி ஆகியோர் மாணிக் சஹாவுக்கு உதவிகரமாக இருந்தனர்.