;
Athirady Tamil News

பஞ்சாப் முதல்வர் எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!!

0

பஞ்சாப் மாநிலத்தில் திங்கள்கிழமை முதல் மொத்தமாக தற்செயல் விடுப்பெடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவந்த பஞ்சாப் சிவில் பணி அதிகாரிகள் தங்களது வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர். முன்னதாக, வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் புதன்கிழமை மதியத்திற்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று முதல்வர் பகவந்த் மான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியின் போக்குவரத்து அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தவர் நரிந்தர் சிங் தலிவால். இவர், விதிமீறல் செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு மாநில புலனாய்வு அமைப்பினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு மாநில குடிமைப் பணி அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதற்காக, ஜன.8-ம் நடந்த கூட்டத்தில், மாநில அரசு அதிகாரி சட்டவிரோதமாகவும், தவறுதலாகவும், தன்னிச்சையாகவும் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாமலும் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், ஜன.9-ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு தற்செயல் விடுப்பு எடுத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டடது.

விடுப்பு எடுத்து போராட்டம்: அதன்படி, மாநிலத்தின் அனைத்து அரசு அதிகாரிகளும், திங்கள்கிழமை முதல் மொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களின் போராட்டத்திற்கு வருவாய்த் துறை ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் மாநிலத்தில் அரசு பணிகள் பாதிக்கப்பட்டன.

முதல்வர் எச்சரிக்கை: இதனைத் தொடர்ந்து புதன்கிழமை மதியம் 2 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “வேலை நிறுத்தம் என்ற போர்வையில் சில அதிகாரிகள் பணிக்கு வராமல் இருப்பது குறித்து எனது கவனத்திற்கு வந்துள்ளது. அவர்கள் எல்லோரும் ஊழல் அதிகாரி ஒருவர் மீது அரசு எடுத்துள்ள கடுமையான நடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த அரசு ஊழலுக்கு எதிரானது என்பதை நான் தெளிவாக கூறிக்கொள்கிறேன். இந்த மாதிரியாக போராட்டம் நடத்துவது அரசை மிரட்டுவதற்கும், கலகத்தைத் தூண்டுவதற்கும் சமம். எந்த பொறுப்புள்ள அரசாங்கமும் இதனைப் பொறுத்துக்கொள்ளாது. எனவே, இந்த வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது. இன்று (புதன்கிழமை) மதியம் 2 மணிக்குள், அதாவது, 11.01.2023 மதியத்திற்குள் பணிக்குத் திரும்பாத அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். பணிக்கு வராமல் இருக்கும் நாட்களில் அவர் இல்லாதவராகவே கருதப்படுவார்” என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

வாபஸ்: முதல்வர் அறிவித்திருந்த காலக்கெடு நெருங்கி வந்த நிலையில், பஞ்சாப் சிவில் பணி அதிகாரிகள் தங்களின் விடுப்பெடுக்கும் போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டு பணிக்குத் திரும்புவதாக அறிவித்தனர். இதனை, பஞ்சாப் சிவில் பணியாளர்கள் சங்க தலைவர் ஏ.வேணுபிரசாத், இணைத் தலைவர் ராஜட் ஓபேராய் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.