ஜோஷிமத் நிலவரம் | அரசு இடைக்கால நிவாரண நிதி அறிவிப்பு; என்டிபிசி-க்கு எதிராக மக்கள் போராட்டம்!!
ஜோஷிமத் நகரில் நிலவெடிப்பு காரணமாக கட்டிடங்கள் விரிசல் விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக தலா ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என்று உத்தராகண்ட் அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, என்.டி.பி.சி-யை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் செயலாளர் ஆர். மீனாட்சி சுந்தரம், ”நிலவெடிப்பு காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால், பலர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக ரூ.1.5 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும்.
இதுவரை 723 கட்டிடங்கள் பாதுகாப்பற்ற கட்டிடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், இரண்டு கட்டிடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பற்ற மற்ற கட்டிடங்கள் இடிக்கப்பட மாட்டாது. நல்வாய்ப்பாக, ஜனவரி 7-ம் தேதிக்குப் பிறகு கட்டிடங்களில் புதிய விரிசல்கள் ஏதும் விடவில்லை. பழைய விரிசல்களும் விரிவடையவில்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஜோஷிமத் உள்ள சமோலி மாவட்டத்தின் ஆட்சியர் ஹிமான்ஷூ குராணா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன், பாதிக்கப்பட்ட மக்களை மீனாட்சி சுந்தரம் சந்தித்து பேசினார். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிமான்ஷூ குராணா, ”ஜோஷிமத்தில் ஆபத்தான கட்டிடங்களாக 723 கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் இதுவரை 131 குடும்பங்கள் மட்டுமே பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் போராட்டம்: ஜோஷிமத் அருகில் உள்ள தேசிய அனல் மின் நிலையமான என்.டி.பி.சி-யை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அனல் மின் நிலையம் காரணமாகவே நிலவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மூழ்கும் ஜோஷிமத்: உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் உள்ளது ஜோஷிமத் நகரம். பத்ரிநாத் கோயிலுக்கு செல்வதற்கான நுழைவு வாயிலாகத் திகழும் இந்த நகரில் வீடுகள், விடுதிகள், ஓட்டல்கள் உட்பட சுமார் 4,500 கட்டிடங்கள் உள்ளன. இங்கு சுமார் 30,000 பேர் வசிக்கின்றனர். கடந்த டிசம்பர் இறுதியில் ஜோஷிமத் நகரின் பல்வேறு வீடுகள், வணிக நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. இதையடுத்து பாதுகாப்பற்ற கட்டிடங்களாக 723 கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பின்புலம் என்ன? – அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை, பருவநிலை மாற்றம், மலைப் பகுதியில் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதே நிலச்சரிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இங்கு நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காக மலைப்பகுதிகள் வெட்டப்பட்டு, அகலப்படுத்தப்படுகின்றன. இது இந்த மண்டலத்தின் நிலப்பகுதியை நிலைகுலையச் செய்யும் என்று இமயமலையின் டெக்னானிக்ஸ் நிபுணரும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள என்ஐஏஎஸ் மையத்தின் புவியியல் நிபுணருமான சி.பி.ராஜேந்திரன் எச்சரிக்கை செய்துள்ளார்.