கவர்னர்களை கட்சி ஊழியர்களாக பா.ஜனதா பயன்படுத்துகிறது: மல்லிகார்ஜூன கார்கே!!
தமிழ்நாடு சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை வாசிக்கவில்லை. அவற்றை சேர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் வாசித்தபோது, கவர்னர் வெளிநடப்பு செய்தார். இது, பெரும் விவாதப்பொருளாக மாறி உள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களை கட்சி ஊழியர்களாக பயன்படுத்தி, அந்த பதவியை இழிவுபடுத்த பா.ஜனதா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இது, ஜனநாயகம் மீதான தாக்குதல். சமீபத்தில், சில கவர்னர்கள் அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறி இருப்பது, இந்திய அரசியலின் கூட்டாட்சி முறையின் பெருமையை சீர்குலைத்துள்ளது. கவர்னர்கள், அரசியல் சட்ட கட்டமைப்புக்குள் செயல்பட வேண்டும்.
அதன் ஒரு அங்கமாக இருக்கும் சட்டசபையை இழிவுபடுத்தக்கூடாது. பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சமூக, அரசியல் பதற்றத்தை ஏற்படுத்த கவர்னர்களை அவர்களின் டெல்லி எஜமானர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது ஆபத்தானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.