எந்த நேரத்திலும் மத்திய மந்திரிசபை மாற்றம்!!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 2014-2019 ஆண்டு காலகட்டத்தில் 3 தடவை மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், 2-வது தடவையாக பதவி ஏற்ற பிறகு கடந்த 2021-ம் ஆண்டு ஒருதடவை மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டது. பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இம்மாதம் 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடக்கிறது. 9 மாநில சட்டசபை தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது. இந்தநிலையில், மத்திய மந்திரிசபை இம்மாதம் மாற்றி அமைக்கப்படலாம் என்ற பேச்சு வலுவடைந்து வருகிறது. வருகிற 31-ந் தேதி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
அதற்கு முன்பு எந்த நேரத்திலும் மந்திரிசபை மாற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், தகவல் அறிந்த வட்டாரங்கள் இத்தகவலை தெரிவித்தன. கடந்த மந்திரிசபை மாற்றத்துக்கு பிறகு முக்தார் அப்பாஸ் நக்வி பதவிக்காலம் முடிந்தது. ஐக்கிய ஜனதாதளம் விலகியது. இதனால், மந்திரிசபையில் காலியிடங்கள் ஏற்பட்டன. அவற்றை நிரப்பும்வகையில், மந்திரிசபை மாற்றம் இருக்கும். அப்போது, மத்திய மந்திரிகளின் செயல்பாடுகள், சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலங்களின் அரசியல் கணக்குகள் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. மராட்டிய மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, மந்திரிசபையில் சேர்த்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ளது.
மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானுக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம். குஜராத் சட்டசபை தேர்தலில் பெற்ற அமோக வெற்றி, இமாசலபிரதேச சட்டசபை தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல் ஆகியவற்றில் பெற்ற பாடங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு மந்திரிசபை மாற்றம் இருக்கும். பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா ஆகிய பெரிய மாநிலங்களின் அரசியல் கணக்குகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
சட்டசபை தேர்தல் நடக்கும் கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்களுக்கு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. அதே சமயத்தில், கட்சியை வலுப்படுத்த சில மத்திய மந்திரிகள் கட்சிப்பணிக்கு அனுப்பப்படலாம் என்றும் தெரிகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே இருப்பதால், இதுதான் கடைசி மந்திரிசபை மாற்றமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.