பிஹாரில் வன்முறையில் முடிந்த விவசாயிகள் போராட்டம்!!
பிஹாரின் பக்சார் மாவட்டம், சவுசா என்ற இடத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ‘சட்லஜ் ஜல் வித்யூத் நிகம்’ என்ற பெயரில் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.
இத்திட்டத்துக்கு பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நிலம் வழங்கியுள்ளனர். அவர்கள் தங்களிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு புதிய விலை நிர்ணயிக்க கோரி நீர்மின் நிலையம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் போராட்டத்துக்கு தலைமை வகித்த நரேந்திர திவாரி உள்ளிட்ட 4 பேரை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அப்போது விவசாயிகளின் வீடுகளில் புகுந்து போலீஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நீர்மின் நிலையப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் வன்முறையில் இறங்கினர். போலீஸார் மீதும் நீர்மின் நிலையம் மீதும் கற்களை வீசிய விவசாயிகள், போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தினர். ஒரு வாகனத்துக்கு தீ வைத்தனர். விவசாயிகளின் கல்வீச்சில் 4 போலீஸார் காயம் அடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.