;
Athirady Tamil News

எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி: வண்ண பொடிகளை உடலில் பூசி திரளானவர்கள் பங்கேற்றனர்!!

0

மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதையொட்டி ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தநிலையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதனையொட்டி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர்கள் குழுவினரின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நேற்று எருமேலியில் நடந்தது.

மத ஒற்றுமைக்கு சான்றாக விளங்கும் இந்த நிகழ்ச்சி பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. அதாவது அனைவரும் சமம் என்ற நிலையில் சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி ஐயப்ப பக்தர்கள் உள்பட அனைவரும் தங்கள் முகம், உடல் மீது வண்ண, வண்ண பொடிகளை பூசி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் இலை, தழைகளை கையில் ஏந்தியவாறு பலரும் ஐயப்பனின் சரண கோஷத்தை எழுப்பினர். இந்த ஊர்வலம் எருமேலி கொச்சம் பலத்தில் இருந்து புறப்பட்டது. தொடர்ந்து வாவர் மசூதிக்கு வந்து காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து தர்ம சாஸ்தா கோவிலில் சாமி தரிசனம் செய்தபிறகு சபரிமலைக்கு பக்தர்கள் நடைபயணமாக புறப்பட்டனர்.

இரவு சாமி ஐயப்பனின் பாரம்பரிய பெருவழி பாதை வழியாக பக்தர்கள் குழுவினர் தங்களது பயணத்தை தொடர்ந்தனர். பேரூர் தோடு, காளை கட்டி, அழுதாமலை, கரிமலை வழியாக நடந்து சென்று நாளை (வெள்ளிக்கிழமை) பெரியானை வட்டம் வழியாக பம்பை ஆற்றங்கரைக்கு சென்று முகாமிடுவார்கள். தொடர்ந்து ஐயப்பனுக்கு பம்பை விருந்து மற்றும் பம்பை விளக்கு ஏற்றுதல் உள்பட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. பின்னர் அம்பலப்புழை, ஆலங்காடு பக்தர் குழுவினர் சபரிமலை நோக்கி மலையேறி செல்வார்கள்.

தொடர்ந்து 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்த பிறகு அனைவரும் சபரிமலையில் முகாமிட்டு இரவில் ஓய்வு எடுப்பார்கள். நாளை மறுநாள் மகரஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு அம்பலப் புழை பக்தர் குழுவினர் சார்பில் சிறப்பு நிவேத்யம், நெய்யபிஷேகம் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.