தமிழ்நாடு அரசு முத்திரையை தவிர்த்துவிட்டு மத்திய அரசு முத்திரையை கவர்னர் பயன்படுத்தியது ஏன்?- தி.மு.க., தி.க. கேள்வி!!
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று மாலை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கவர்னர் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.
அந்த அழைப்பிதழில் மத்திய அரசின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இடம்பெறும் தமிழ்நாடு மற்றும் திருவள்ளுவர் ஆண்டு போன்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை. இதனால் கவர்னரின் பொங்கல் அழைப்பிதழ் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கவர்னருக்கு இந்த விவகாரத்தில் பதில் அளிக்கும் வகையில் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தி.மு.க.வின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- தனது பொங்கல் அழைப்பிதழில் கவர்னர், “தமிழ்நாடு” என்பதையும், தமிழ்நாடு அரசு முத்திரையையும் தவிர்த்துவிட்டு, “தமிழகம்” என்றும், ஒன்றிய அரசு முத்திரையையும் பதித்திருக்கிறார்.
வீரம் செறிந்த தமிழ்நாடு, திருமேனி செழித்த தமிழ்நாடு, புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு, மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு. மணியாரம் படைத்த தமிழ்நாடு; என்றெல்லாம் மகாகவி பாரதி ஏற்றிப் போற்றிப் பாடியதெல்லாம் மறந்து போனதோ? “தமிழ்த் திருநாடு தன்னை, பெற்ற எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா” என்று பாப்பாவுக்கே பாரதி, ‘தமிழ்த் திருநாடு’ என்று தானே புகட்டினார்? அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்டுள்ள ‘தமிழ்நாடு’ என்ற பெயரைக் கேட்டாலே ஏன் இந்த அலர்ஜி என்று புரியவில்லை. தமிழ்நாடு அரசு முத்திரையைத் தவிர்த்திருப்பதன் மூலம் அந்த முத்திரையில் உள்ளதும், இந்திய அரசியல் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளதுமான ‘தமிழ்நாடு’ என்ற பெயரையும், வணங்குதற்குரிய திருவில்லிப்புத்தூர் கோயில் கோபுரத்தையும் (கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்மீகம்), ‘வாய்மையே வெல்லும் (சத்தியமேவ ஜயதே)’ என்ற போற்றுதலுக்குரிய பொன்னான வாசகத்தையும், தவிர்த்திருக்கிறார்.
கவர்னருக்கு, அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்ட ‘தமிழ்நாடு’ என்ற பெயர் எட்டிக்காயா? தமிழ்நாடு என்பதும், தமிழகம் என்பதும் ஒன்றுதான்; எனினும் ‘தமிழ்நாடு’ என்பது அரசியல் சட்ட ரீதியான பின்னணியும், வலிமையும் கொண்டது. ‘வாய்மையே வெல்லும்’ என்ற பொன்மொழி என்ன புன்மொழியா? அதுசரி, அழைப்பிதழில் ஒன்றிய அரசின் முத்திரையைப் பதித்திருப்பதன் மூலம் எதை உணர்த்துகிறார் கவர்னர்? அந்த முத்திரையை ஒன்றிய அரசு மட்டும்தான் பயன்படுத்தலாம்.
இவரோ தமிழ்நாடு மாநில கவர்னர்; இவர் ஒன்றும் குடியரசுத் தலைவரோ, பிரதமரோ, ஒன்றிய அரசின் அமைச்சரோ அல்லவே! வேறு எந்த மாநில கவர்னராவது, இப்படிச் செய்கிறார்களா? இவருக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட கோபம், கொந்தளிப்பு? ‘ஒன்றியம்’ என்றாலும் வெறுப்பு! யூனியன் என்றாலே ஒன்றியம் தான். அரசியல் அமைப்பின் இரண்டாவது பிரிவில், ‘India, that is Bharat, shall be union of states’ என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது. பல மாநிலங்கள் ஒன்றிணைந்து அமைந்ததுதான் ஒன்றியம். எனவே ஒன்றியம் என்று சொல்வதில் எந்தப் பிழையும் இல்லை.
‘ஒன்றிய’த்திலிருந்து ஏன் விலகிக்கொள்ள வேண்டும்? இந்திய ஒன்றியம் என்றாலும், ஒன்றிய அரசு என்றாலும், இந்திய அரசு என்றாலும், மத்திய அரசு என்றாலும், ஒரே அமைப்பைத்தான் குறிக்கும். இதில் ஒன்றியம் என்பது, அதன் பொருளும் பொருத்தமும் கழக அரசுக்கு ஏற்புடையது என்பதால், அப்படிப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் வேண்டும் என்றால், மத்திய அரசு என்று சொல்லிவிட்டுப் போங்கள், யார் தடுக்கிறார்கள்? அதற்காக ‘ஒன்றியம்’ என்றால் தவறு, கீழானது என்று ஏன் சொல்ல வேண்டும்? “எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா ரோஜாதான்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு என்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு என்று கூறுவது கூடாது என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு அரசின் ஆளுநர் ஆர்.என்.ரவி. எப்படிச் சிரிப்பது என்றே தெரியவில்லை. யூனியன் கவர்மென்ட் என்ற சொல்லுக்குச் சரியான தமிழ்மொழி பெயர்ப்பு ‘ஒன்றிய அரசு’ என்பதே! ‘மத்திய அரசு’ என்ற சொல், அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரப்பூர்வ சொல் அல்ல. ஆட்சிகளின் அதிகாரப் பகுப்புகளுக்கு மூன்று பட்டியல்களின் தலைப்பு என்ன? ஆளுநர் அரசியலமைப்புச் சட்டவரலாற்றை புரிந்து கொள்ளத் தவறக்கூடாது.
அரசமைப்புச் சட்டம் இயற்றிய அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போது, மத்திய அரசு என்ற சொல்லுக்குப் பதிலாக ஒன்றிய அரசு என்ற சொற்றொடரைப் போடவேண்டும். காரணம் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் என்றால் ‘மத்திய அதிகாரக் குவிப்பு’ என்ற பொருள் வந்துவிடக்கூடும். அதைத் தவிர்க்கவே ‘ஒன்றிய அரசு’ சொல்லாக்கம் இடம்பெற்றது” திட்டமிட்ட பின்னணியோடு வம்பு வளர்ப்பதற்காகவே-பொங்கல் விழாவை ஏற்பாடு செய்த ஆளுநர் ரவி, அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் லச்சினையான கோபுரச் சின்னத்தை உள்ளடக்கிய, தமிழ்நாடு அரசினைப் புறக்கணித்துள்ளார். இவர் எங்கே கவர்னர்? தமிழ்நாட்டுக்குத்தானே.
இவர் எந்த அரசின் நிதியிலிருந்து ஊதியம் வாங்குகிறார்? எங்கே குடியிருக்கிறார்? டெல்லியிலா? அதுமட்டுமா யூனியன் லிஸ்ட் ஒன்றிய அரசு பட்டியல் என்றுதான் குறிப்பிட்டுள்ளது சென்ட்ரல் லிஸ்ட் என்று அல்ல என்பதை ஆளுநர் படித்துப் புரிந்து கொள்ளட்டும். ஒன்றியம் என்றால், அவருக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள் பஞ்சாயத்து யூனியன் என்ற சொல்லை நினைத்துக்கொண்டு பாடத்தைத் தவறாகச் சொல்லிக் கொடுத்து, இவரும் அது புரியாமல் இப்படி குறுக்குச்சால் ஓட்டுகிறார். இவர் இப்போது பிரச்சாரம் செய்யும் சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை விளக்க கர்த்தாவான எம்.எஸ்.கோல் வால்கர் பஞ்ச் ஆப் தாக்ட்ஸ் நூலில் ‘ஞானகங்கை’ என்ற தலைப்பிட்டு, வெளியிடப்பட்டிருப்பதிலே ”ஒன்றிய அரசு” என்ற சொல் முன்பே இடம்பெற்றுள்ளது-அதுவும் பிரிவினை எண்ணத்தோடுதானா? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் அழைப்பை ஏற்று பொங்கல் விழாவில் பங்கேற்பாரா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பள்ளி, கல்வித்துறை சார்பில் கலை திருவிழா நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் கலந்துகொண்டு மாநில அளவில் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்க உள்ளார். எனவே கவர்னர் நடத்தும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.