;
Athirady Tamil News

அனைத்து சமூக மக்கள் அடங்கிய குழுவை அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்தலாம்- மதுரை ஐகோர்ட் உத்தரவு!!

0

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1-ந்தேதி அன்று பொங்கல் திருநாளையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற பொங்கல் தினத்தன்று (ஜனவரி மாதம் 15-ந்தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன. அவனியாபுரம் அம்பேத்கர்நகர் பகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவனியாபுரத்தில் பிற சமூகத்தை சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். கடந்த ஆண்டில் கோர்ட்டு உத்தரவின்பேரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஆனால் கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் சேர்க்காமல் குறிப்பிட்ட சமூகத்தினர் அடங்கிய குழு மட்டும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த குழுவில் ஆதிதிராவிடர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இது ஏற்புடையதல்ல. எனவே கடந்த ஆண்டு நடத்தப்பட்டதைப்போல கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து வருகிற பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கென அரசு பல ஏற்பாடுகள் மற்றும் செலவுகளைச் செய்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கென நிலையான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் உள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கென பல சமூகத்தினரும், அமைப்புகளும் கமிட்டி உருவாக்குகின்றனர். பலவகை சமாதான கூட்டம் நடத்தியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலைமையில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணையில் மனுதாரர் தரப்பில், 2022-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி ஒருங்கிணைப்புக் குழுவில் அதிகாரிகளும், ஆலோசனைக்குழுவில் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து குழு உருவாக்கி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஆண்டும் அதேபோல் குழு அமைத்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் ஆலோசனை குழுவின் வேலை என்ன ஒருங்கிணைப்பு குழுவின் வேலை என்ன என கேள்வி எழுப்பினர்.

இதற்கு மனுதாரர் தரப்பில், ஆலோசனை குழுவில் கிராமத்தின் அனைத்து சமுதாய உறுப்பினர்களும் இணைந்து காளைகளை தேர்வு செய்வது, பந்தல்கால் நடுவது, விழாக்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு அரசு தரப்பில், இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பொருத்தவரை ஆலோசனைக்குழு என எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட நீதிபதிகள், தங்களது உத்தரவில் அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து, நாளை (13-ந் தேதி) மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும்.

சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அவனியாபுரம் அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனைக்குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம். சமாதான கூட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனரை இணைத்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும். ஒருவேளை மதுரை அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்கள் இணைந்த ஜல்லிக்கட்டுக்குழு அமையப்பெற்று, நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏதேனும் சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.