பால் விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் -அ.தி.மு.க. தீர்மானம்!!
புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- புதுவையில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை உடனடியாக அரசும், கவர்னரும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள பொது விநியோக திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கி, ரேஷன் கடைகளை திறந்து அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய், மிளகாய், மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீண்டும் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.
மேலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 50 மாத சம்பள பாக்கியை வழங்கவேண்டும். மக்கள் நலன் சார்ந்த இப்பிரச்சனையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கட்சித்தலைமை அனுமதி பெற்று அ.தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்தும். பால் விலையேற்றத்தினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பால் விலை உயர்வை முதல்-அமைச்சர் ரங்கசாமி மறுபரிசீலினை செய்து குறைக்க வேண்டும். மின் ஒழுங்கு முறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு பரிந்துரையை அரசு ஏற்கக்கூடாது மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான முன்னாள் மாநில செயலாளர் நடராசன், ஜெ. பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில துணை தலைவர் ராஜாராமன் மற்றும் மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, மகாதேவி , கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள், எம்.ஏ.கே. கருணாநிதி, குணசேகரன், கணேசன்,விகே மூர்த்தி, காந்தி, நாகமணி,ஜெய.சேரன், குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ .மேற்கு மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.